சர்ச்சைக்குரிய முதன்மை விநியோகஸ்தர் நிறுவனம் மீதான இடைநிறுத்தம் நீடிப்பு
சர்ச்சைக்குரிய முதன்மை விநியோகஸ்தர் நிறுவனமான பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் லிமிடெட் (Perpetual Treasuries Limited) மீதான இடைநிறுத்தத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு மத்திய வங்கி (CBSL) நேற்று (05.07.2024) நீடித்துள்ளது.
முன்னதாக, மத்திய வங்கி 2017ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதி பெர்பெச்சுவல் ட்ரஷரீஸின் வர்த்தகத்தை முதன்முதலில் இடைநிறுத்தியது,
அதன் பின்னர், தற்போது வரை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் குறித்த இடைநிறுத்தம் நீடிக்கப்பட்டு வருகிறது.
மத்திய வங்கியின் அறிக்கை
2015ஆம் ஆண்டு அரச பத்திர விற்பனையில் முறைகேடுகள் குறித்து பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், பதிவுசெய்யப்பட்ட பங்கு மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்ளுர் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறைகளின் அடிப்படையில், பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தக இடைநிறுத்தத்தை நீடிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய வங்கி, தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024 ஜூலை 5 அன்று மாலை 4:30 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் மேலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முதன்மை வியாபாரியின் வணிகம் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படாது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |