சுரேஷ் சலே விவகாரம் - சிஐடியினருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அவசர அழைப்பு
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் குறித்து விளக்கமளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளை கடந்த வாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாற்று திகதியை கோரியிருந்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சுரேஷ் சாலே..! தயார்நிலையில் மருத்துவ அறிக்கை
ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு
இந்நிலையில், இந்த வாரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சலேவின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்ற ஆணைக்குழு அதிகாரிகள், சுரேஷ் சலேயிடம் வாக்குமூலம் ஒன்றையும் பதிவு செய்துள்ளது.
மேலும், அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூண்டுக்கு அருகில் இருந்த ஏனைய சந்தேகநபர்களிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், சுரேஷ் சலேவின் தற்போதைய நிலைமையை கண்காணிக்க நேற்று (08) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுரேஷ் சாலேவை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம்
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
இதேவேளை,பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை விடுதலை செய்யுமாறு நேற்று முதல் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.