உர பாவனை தொடர்பான ஆய்வில் வெற்றி! விவசாய அமைச்சு தகவல்
எதிர்வரும் மகா பருவத்தில் இரசாயன மற்றும் கரிம உரங்களின் கலவையைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நெல் பயிர்ச்செய்கையில் 70 சதவீதம் இரசாயன உரங்களையும் 30 சதவீதம் கரிம உரங்களையும் பயன்படுத்துவதற்கு பத்தலகொட அரிசி ஆராய்ச்சி நிலையம் மற்றும் அபிவிருத்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள் வெற்றி பெற்றுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
உற்பத்தியில் வீழ்ச்சி
கடந்த மகா பருவத்தில், கரிம உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையால் அறுவடை குறைந்துள்ளது. இதனால் உரிய இலாபம் கிடைக்காமையால், உள்ளூர் உணவு உற்பத்தியில் பாரிய தாக்கம் ஏற்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், கடந்த ஆண்டு மகா பருவகால நெல் அறுவடை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பத்தலகொட அரிசி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தில் இரசாயன மற்றும் கரிம உரங்களை ஒன்றிணைத்து நெல் பயிர்ச்செய்கையில் பயன்படுத்தும் நோக்கில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
நிபுணர்களின் தீர்மானம்
இந்த ஆய்வில், 70 சதவீதம் இரசாயன உரங்களையும் 30 சதவீதம் கரிம உரங்களையும் ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்ட கலவையின் முடிவு வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், 2022 ஆம் ஆண்டு மகா பருவத்தில் நெல் பயிர்ச்செய்கையில் 70 இற்கு 30 என்ற அளவில் இரசாயன மற்றும் கரிம உரங்களை பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.