சர்வதேச ரீதியிலான சதுரங்க போட்டியில் விளையாட உள்ள யாழ். மாணவர்கள் (Photos)
யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்துள்ளனர்.
இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இலங்கை சார்பாக விளையாட தகுதியுடைய வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தேசிய மட்டப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.
யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர்
இப்போட்டியில் வெற்றிகளைப் பெற்ற யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
குறிப்பாக கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் வேணுகானன் நயனகேஷன் 7 வயது ஆண்கள் பிரிவிலும், வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சிவஞானவேல் நர்த்தவி 15 வயது பெண்கள் பிரிவிலும் தேசிய மட்டத்தில் முதல் இடத்தை பெற்று கிரீஸ் நாட்டில் நடக்கவுள்ள சதுரங்கப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் இப் போட்டிகளில் யாழ். மாவட்டத்தில் இருந்து 13 வயது பெண்கள் பிரிவில்
உ.வைஷாலி மூன்றாம் இடத்தினைப் பெற்றும், அ.ஆருத்ரன் 17 வயது ஆண்கள் பிரிவில்
நான்காம் இடத்தினைப் பெற்றும், பி.ஜனுக்சன் 13 வயது ஆண்கள் பிரிவில் ஆறாம்
இடத்தினைப் பெற்றும், பி.பிரதிக்சா 9 வயது பெண்கள் பிரிவில் ஆறாம் இடத்தினைப்
பெற்று இலங்கை அணி சார்பாக கிரீஸ் நாட்டில் நடக்கவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான
உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளனர்.




