உடல் ரீதியான தண்டனையை ஒழிப்பது சிக்கலானது : தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவிப்பு
இலங்கையில் சிறுவர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் (Corporal Punishment) உடல் ரீதியான தண்டனைகளை ஒழிப்பது சிக்கலானது என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையகத்தின் தலைவர் சன்னக உதயகுமார (Channaka Udayakumara) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அணுகுமுறைகள் காரணமாக சிறுவர்கள் உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகுவதுடன் இது குறித்து முறைப்பாடு செய்கின்றனர்.
சட்ட நடவடிக்கை
உடல் ரீதியான தண்டனைகளினால் ஆசிரியர்களால் சிறுவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஆகையால், அந்த சிறுவர்கள் இது தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்தால், குறித்த ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
எனினும், சிலவேளையில் குறித்த முறைப்பாடுகளை அளித்த சிறுவர்களால் தாம் கல்விகற்கும் பாடசாலைகளில் மீண்டும் இணைந்து கல்வியை தொடர முடியாமல் போகலாம்.
ஆகையால், சிறுவர்களை மையப்படுத்திய உடல் ரீதியான தண்டனைகளை ஒழிக்க முயற்சிப்பது மிகவும் சிக்கலானது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில், சிறுவர்கள் குறித்த உடல் ரீதியான தண்டனையை ஒழிக்கும் நடைமுறை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வலியுறுத்தியுள்ளோம்.
அதேநேரம், கடந்த பத்து ஆண்டுகளில் சிறுவர் கொடுமை - உடல் ரீதியான தண்டனை சம்பவங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |