மல்வத்து ஓயா திட்டத்தை துரிதப்படுத்த ஜனாதிபதியிடம் யோசனை முன்வைப்பு: ஜெகதீஸ்வரன் எம்.பி
மன்னார் மற்றும் செட்டிகுளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயா திட்டத்தை துரிதப்படுத்த ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (29.05) இடம்பெற்ற கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் 29.05 அன்று இடம்பெற்ற கூட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான முன்மொழிவுகளை வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டம் சார்ந்த முன்மொழிவுகளை முன்வைத்து இருந்தேன்.
முள்ளிக்குளம் - பாலம்பிட்டிக்கு இடையிலான பாதை
இதன்போது, அதனை நிறைவேற்ற வேண்டியதன் கட்டாயத்தையும் எடுத்துக் கூறியிருந்தேன். மன்னார் மாவட்டத்தில் முள்ளிக்குளம் மற்றும் பாலம்பிட்டிக்கு இடையிலான பாதை தொடர்பாகவும் பேசியிருந்தேன்.
12 கிலோமீற்றர் வீதியில் இந்த வருடம் 2 கிலோமீற்றர் போடப்படவுள்ளது. மிகுதி 10 கிலோமீற்றர் வீதியை காபற் இடுவதற்கு முன்மொழிந்து இருந்தேன். இந்தப் பகுதி மக்கள் தமது அரச சேவைகளை மேற்கொள்வதற்கு இந்த வீதி சீரின்மையால் மேலதிகமாக 70 கிலோமீற்றர் தூரத்தில் பயணிக்க வேண்டியுள்ளது.
அதனை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அடுத்த வருடம் நிதி ஒதுக்குவதாக கூறியிருந்தார். அதுமட்டுமன்றி, மன்னார் மாவட்டத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மூலமே குடிநீர் பெறப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் ஆழ்துளைக் கிணற்று தண்ணீர் உவர் நீராக மாற வாய்ப்புள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் தெரிவித்துள்ளனர். எனவே அதற்கு மாற்றீடாக ஏற்கனவே முன்மொழியப்பட்டு செயற்படுத்தப்படுகின்ற மல்வத்து ஓயாத் திட்டம் மந்த கதியில் உள்ளது.
அதை விரைவுபடுத்த நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. அந்த திட்டத்தை மேற்கொள்ளும் போது முழுமையாக மன்னார் மாவட்டத்திற்கும், செட்டிகுளத்திற்கும் குடிநீரை வழங்க முடியும் என்பதுடன் விவசாயத்தையும் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்திருந்தேன்.
தலைமன்னார் - இராமேஸ்வரம் பாதை
மன்னார் மாவட்டத்தில் தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்கும் இடையில் பாதை சேவை இடம்பெற வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தி இருந்தேன்.
அதன் முக்கியத்தையும், அது தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகர் கூறிய விடயத்தையும் கூறியிருந்தேன். இந்திய உயர் ஸ்தானிகர் இறங்குதுறை அமைக்குமாறு கோரினார். அதற்கான முன்மொழிவை சமர்ப்பித்தேன்.
மன்னார் தீவுப் பகுதி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்படுகிறது. வடிகாலமைப்பு சீரில்லாது புகையிரத பாதைகள், வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல மாதங்களாக பாதிக்கப்படுகிறார்ள். அதற்கு நிரந்த தீர்வை காண 198 மில்லியன் ரூபாய் தேவை என கூறியிருந்தேன். அது தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி கூறியிருந்தார்.
வவுனியா மாவட்டத்தில் சிறிய, பெரிய குளங்கள் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாது உள்ளது. இதனால் நீரினை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. பல குளங்கள் முழுமையாக புனரமைக்கப்பட வேணடியுள்ளது. அதறகான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் கருத்துக்கள முன்வைத்திருந்தேன்.
வவுனியா மாவட்ட செயலக கட்டமானது 138 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதனை திருத்தி அமைக்க வேணடிய தேவைகள், அதனை நவீன மயப்படுத்த வேண்டிய தேவைகள் உள்ளது. அது தொடர்பான முன்மொழிவுகளை அரசாங்க அதிபர் என்னிடம் வழங்கியிருந்தார்.
அதனை நான் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலத்திற்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதனை முழுமைப்படுத்த இன்னும் 1000 மில்லியன் ரூபாய் தேவை எனவும் கூறியிருந்தேன்.
கடலரிப்பு
பாண்டியன்குளம், குத்துபாலம் சிதைவடைந்து போக்குவரத்துக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. அதை புனரமைக்க 500 மில்லியன் ரூபாய் தேவை என கூறியிருந்தேன். அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். வங்கலை பிரதேசத்தில் விரைவான கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதை தடுக்க 23 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதனை முழுமைப்படுத்த மேலும் 23 மில்லியன் ரூபாய் உடனடியாக தேவை எனவும் கூறியிருந்தேன். வடக்கு மாகாணத்தில் பல வருடங்களாக இடமாற்றப் பிரச்சனை உள்ளது.
குறிப்பாக வன்னி மாவட்டத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. பல ஆசிரியர்கள் யாழில் இருந்து வந்துள்ளார்கள். அவர்கள் 7,8 வருடம் முடிந்ததும் யாழ் செல்கிறார்கள்.
இதனால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் கோட்டா முறையில் அதனை மாவட்டங்களில் தெரிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தேன். பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



