யாழில் தமிழ் போராளிகளுக்கு சிலை வைக்க டக்ளஸ் நடவடிக்கை
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்தவர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் யாழ். (Jaffna) கோட்டை சுற்றுவட்டப் பகுதியை சுற்றி சிலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
யாழ். அலுவலகத்தில் இன்றையதினம் (15.06.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"எம்மிடையே இருக்கும் தேசிய நல்லிணக்கமும் அதனூடான அணுகுமுறைகளும் மட்டுமல்லாது எமது தற்துணிவுமே இன்று யாழ் மாவட்டத்தில் எமது இனத்தின் வரலாற்றை சொல்லும் மன்னர்கள் பலரது சிலைகள், வரலாற்று சான்றுகள் மற்றும் கட்டடங்கள் நிறுவப்பட்டிருப்பதற்கு காரணமாக இருக்கின்றது.
உரிமைக்காக போராடியவர்கள்
இந்நிலையில், குறிப்பாக தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ் தலைவர்கள், போராளிகள், மக்கள் எனப் பலரும் நினைவுகூரப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.
அத்துடன், அவர்களது கனவுகளும் நிறைவேற வேண்டும். அதேபோன்று அவர்களை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகளும் அவர்களது நினைவுச் சிலைகளும் நிறுவப்படுவது அவசியமாகும். இதில் கட்சி பேதங்களோ இயக்க வேற்றுமைகளோ இருக்கப்போவதில்லை.
ஏற்கனவே, யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்திலுள்ள மன்னர்களது சிலைகள், முத்திரைச் சந்தியிலுள்ள சங்கிலியன் சிலை, யாழ். மடத்தடியிலுள்ள தனிநாயகம் அடிகளார் சிலை போன்றனவும் எமது அணுகுமுறைகளால் தடைகளை தகர்த்து நிறுவப்பட்டுள்ளன.
வரலாற்றின் உண்மைத்தன்மை
இவற்றினூடாகவே எமது மக்களின் இருப்புக்கள் மற்றும் வரலாறுகள் அடுத்த சந்ததிக்கு உண்மைத்தன்மையுடன் எடுத்துச் செல்லப்படுகின்றன என நான் நினைக்கின்றேன்.
இதனடிப்படையில், தமிழ் மக்களின் தேசிய தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட நினைவுகூரப்பட வேண்டிய தமிழ் போராளிகள் பலரும் உள்ளனர்.
எனவே, அவர்களது நினைவேந்தல்களை இயக்க வேறுபாடுகள் இன்றி, சிலைகள் அமைத்து அவர்கள் அனைவரையும் வரலாற்றில் நிலைநிறுத்த எதிர்பார்ப்பார்த்துள்ளேன்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |