நிதி தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள இலங்கை அரச வங்கிகள்
இலங்கையின் இரண்டு பிரதான அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பணத்தை வழங்க மறுத்ததன் காரணமாக அடுத்த வாரம் முதல் நெல் கொள்வனவை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த வாரம் அரிசியின் விலையை குறைப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
நெருக்கடியில் வங்கிகள்
நெல் கொள்வனவு செய்வதற்காக இரண்டு அரச வங்கிகளிடமும் தலா ஒரு பில்லியன் ரூபாய் கடனாக நெல் சந்தைப்படுத்தல் சபை பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும், இரண்டு வங்கிகளும் பணத்தை வழங்க மறுத்து வந்தன.
சபைக்கு இரண்டு பில்லியன் ரூபா கடன் தொகையை வழங்குவதற்கு மத்திய வங்கியின் சான்றிதழ் தேவைப்படுவதாக சம்பந்தப்பட்ட வங்கிகள் தெரிவித்துள்ளன.
கடன் நெருக்கடி
எப்படியிருப்பினும் கடந்த காலங்களில் தொழிலதிபர்களுக்கு விரும்பிய வகையில் கடன் வழங்கியதால், இந்த இரண்டு வங்கிகளும் பணத்தட்டுப்பாட்டால் அவதிப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் இவ்வருடம் கொள்வனவு செய்யப்பட்ட முப்பதாயிரம் மெற்றிக் தொன் நெல் இருப்புக்களை அடகு பிணை பொருளாக வைத்து, பணம் கோரியுள்ள போதிலும் வங்கிகளும் மறுத்துள்ளன.