இந்தியா தலைமன்னார் படகு சேவை: மூன்று மாதங்களில் ஆரம்பம்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான படகு சேவையை ஆரம்பிப்பதற்கான மத்திய நிலையமாக தலைமன்னார் இறங்கு துறையை தெரிவு செய்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் இறங்கு துறை பகுதிக்கு நேற்று (05.08.2023) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் சுற்றுலா வரும் பயணிகளுக்கான வசதிளை தலைமன்னார் இறங்குதுறை பகுதியில் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
37 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின்
தலைமன்னாருக்கு பயணிகள் படகுப் சேவை மூன்று மாதங்களில் ஆரம்பிப்பதற்கான
ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
விரைவான பயணத்தை மேற்கொள்ள திட்டம்
எனினும் இதற்கு முன்னர் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான கப்பல் சேவை இடம்பெற இருந்த நிலையில் தற்போது அது தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான சேவையாக மாற்றப்பட்டுள்ளது.
ஏனெனில் தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் சுமார் 18 கிலோமீட்டர் தூரமாகக் காணப்படும் நிலையில் விரைவான பயணத்தை மேற்கொள்வதற்காக திட்டம் மாற்றப்பட்டுள்ளது. வடக்கில் இடம்பெற்ற மோதல்களின் போது தலைமன்னார் துறைமுகம் அழிக்கப்பட்டதுடன் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
துறைமுகத்தின் எல்லையில் உள்ள அரசுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலம் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்தப்படவுள்ளதுடன் முதற்கட்ட அபிவிருத்திக்காக சுமார் 1800 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |