மத்திய வங்கியின் விசேட திட்டம்
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது , உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புகள் மீதான சட்டப்பூர்வ கையிருப்பு விகிதத்தை (SRR) குறைக்க முடிவு செய்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இன்று (09.08.2023) நடைபெற்ற கூட்டத்தில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 4 சதவீதத்தில இருந்து 2 சதவீதத்திற்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டுடன் இணங்கும் வகையில், வங்கித்தொழில் முறைமைக்குள் திரவத்தன்மையை உட்செலுத்தி, சந்தை திரவத்தன்மை பற்றாக்குறையை நிரந்தர அடிப்படை ஒன்றில் மேலும் குறைக்கும் நோக்குடன் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பணச் சந்தை
நியதி ஒதுக்கு விகிதத்தில் இக்குறைப்பானது ஏறத்தாழ ரூ. 200 பில்லியனைக் கொண்ட திரவத்தன்மையை உள்நாட்டு பணச் சந்தைக்கு விடுவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் நிதியங்களின் செலவில் ஏற்பட்ட குறைவின் விளைவாக சந்தைக் கடன் வழங்கல் வீதங்களில் மேலும் கீழ்நோக்கிய சீராக்கம் ஒன்றை இயலச்செய்து, அதன்மூலம் பொருளாதாரத்திற்கு கொடுகடன் பாய்ச்சல்களில் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சந்தை கடன் வழங்கல் வீதங்கள் விரைவாக குறைக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நியதி ஒதுக்கு விகித குறைப்பின் நன்மையை தாமதமின்றி அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, மத்திய வங்கியானது சந்தை அபிவிருத்திகளை தொடர்ந்தும் கண்காணித்து தேவைப்படின் பொருத்தமான நிர்வாக வழிமுறைகளை எடுக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |