ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள்: நகைச்சுவையாக சாடிய சிறிதரன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் நகைச்சுவை நடிகர் வடிவேலின் "வரும் ஆனால் வராது" என்ற நகைச்சுவைக்கு இணையானதாக உள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (14.11.2023) நடைபெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத்திட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் "வரும் ஆனால் வராது'' என்ற நகைச்சுவை வசனம் போலவே உள்ளது.
வரவு - செலவுத் திட்டம்
அதாவது அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு ஜனவரி மாதம் வரும் ஆனால் வராது. அடுத்த ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் தான் அதனைப் பற்றி யோசிக்கலாம் என்று ஜனாதிபதி மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது நம்பிக்கை என்பது சரியாக சொல்லப்பட வேண்டும். இன்றைய (நேற்றைய) பத்திரிகைகளில் பார்த்தால் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு என்றுதான் உள்ளது.
ஆனால், அது ஜனவரி முதல் என்று சொல்லப்பட்டாலும் 2024 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகுதான் பெற முடியும். இந்த இடைப்பட்ட காலத்துக்குள் எதுவும் நடக்கலாம்.
ஜனாதிபதித் தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் கூட நடக்கலாம். எனவே, இவ்வாறான ஏமாற்று நடவடிக்கைகள் அரசிடம் இருக்கும் வரைக்கும் அரசால் சரியானதொரு பாதையைத் தெரிவு செய்ய முடியாது.
அரச ஊழியர்களையும் சரியான பாதைக்குக் கொண்டு செல்ல முடியாது. கடந்த
காலங்களிலும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், எந்த முன்மொழிவுகளும் செயற்படுத்தப்படவில்லை.
வருடாந்தம் வரவு - செலவுத் திட்டம் என்ற ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |