இடதுசாரி கொள்கையில் உள்ள ஒருவர் ஜனாதிபதியாக தேர்வு: சிறிநேசன்
76 ஆண்டுகளின் பின்னர் ஒரு அதிசயம் நடந்தது போல் இடதுசாரி கொள்கையில் உள்ள ஒருவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - செட்டிபாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒரு முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகின்றது.
கடந்த தேர்தலில் நான்கு விதமான வாக்குகளை பெற்ற ஒரு தலைவர் தற்போது 40 வீதத்துக்கு மேலான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறியிருக்கின்றார்.
அதாவது, அநுரகுமார திசாநாயக்கா இடதுசாரி தலைவராக இருந்து தற்போது ஜனாதிபதியாக இலங்கையில் பதவியேற்று இருக்கிறார்கள்.
கடந்த எட்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்கள் இந்த நாட்டுக்கு அல்லது இந்த நாட்டில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு பணியாற்றியது இல்லை.
எனவே அநுரகுமார திசாநாயக்க பொறுத்தவரையில் அவர் ஒரு இடதுசாரி சிந்தனையில் உள்ளவர். இடதுசாரி போக்குணையுடையவர்.
இரண்டு தடவைகள் அவர்களின் புரட்சிகள் மூலமாக நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தவர்கள். ஆனால் முடியவில்லை. இப்போது அவர் ஜனநாயக வழி மூலமாக அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்த நிலையில், இந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இன பிரச்சனை உள்ளிட்ட இன்னும் பல பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு அவரிடம் இருக்கிறது.
எனவே வெற்றி பெற்று பதவியேற்று இருக்கின்ற அநுரகுமார திசாநாயக்கவுக்கு எனது மக்கள் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.