கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பலத்த பாதுகாப்பு...! கடும் விசனத்தில் ஜனாதிபதி
கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து வரும்நிலையில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று (6.11.2023) காலை ஆர்ப்பாட்டம் நடத்திய குழு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகளிடம் மனுவொன்றை கையளித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் பின்புலத்திலேயே கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிவிசேட வர்த்தமானி
இந்நிலையில், அதிவிசேட வர்த்தமானி ஒன்றினூடாக இலங்கை கிரிக்கெட் சபையை கலைத்து புதிய நிர்வாக இடைக்கால குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் அமைத்துள்ள சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கடும் விசனத்தில் உள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதிக்கு எந்தவித முன்னறிவித்தல்களும் செய்யப்படாததால் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் கடும் விசனமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
எவ்வாறாயினும் அமைச்சரின் உத்தரவை மீளப்பெறுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டால் விளையாட்டுத்துறை அமைச்சுப் பொறுப்பில் இருந்து ரொஷான் பதவி விலகக் கூடுமென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை அணி பங்குபற்றிய போட்டிகளில் படுதோல்வி அடைந்து வருவதால் கிரிக்கெட் ரசிகர்கள் இலங்கை அணி மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.