பிரித்தானியரான ஸ்ரீலங்கன் பிரதானி ரஷ்யாவுக்கான விமான சேவையை நிறுத்தினார்:அவர் மேற்குலக முகவர்
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரித்தானியரான பிரதான அதிகாரி ரஷ்யா - இலங்கை இடையிலான விமான பயணங்களை நிறுத்த ஆரம்பத்தில் இருந்தே கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே விமான சேவைகளை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்து வந்தார். இந்த விமான பயணங்கள் நஷ்டம் என்பதே பெரும்பாலும் அவரது ஆலோசனையாக இருந்தது.
ரஷ்யாவுக்கு விமானப் பயணங்களை நடத்த தேவையில்லை, அதற்கு பதிலாக அவுஸ்திரேலியா போன்ற நாட்டுக்கு விமான சேவைகளை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்தார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய பிரதானி மேற்குலக நாடுகளின் பிரதிநிதி, அவர் ரஷ்யாவுக்கு எதிராக செயற்படுவது சாதாரணமானது. குறிப்பாக இங்கிலாந்து பிரஜைகள், ரஷ்யாவை எதிர்க்கின்றனர்.
இப்படியான கருத்தை முன்வைத்த போது, ஸ்ரீலங்கன் விமான சேவையின் இலங்கை சேர்ந்த அதிகாரிகள் சிலரும் மொஸ்கோவுக்கான விமான சேவை நடத்தப்படுவதை எதிர்த்தனர். இதன் காரணமாக நஷ்டம் என காட்டினர்.
விமானப் பயணச் சீட்டுக்களை விற்பனை செய்ய முடியவில்லை என கூறினர். காப்புறுதி கிடைக்காது என்றனர். எனினும் இவை அனைத்தும் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள்.
குறிப்பாக காப்புறுதி தொடர்பான பிரச்சினை என்பது இன்று நேற்று உருவானதல்ல. இவை தீர்க்க முடியாத பிரச்சினைகள் அல்ல. இவர்களுக்கு வேறு நிகழ்ச்சி நிரல் உள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 15 ஆம் திகதி வரையான காலத்தில் இந்தியாவில் இருந்து 35 ஆயிரத்து 627 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவில் இருந்து 35 ஆயிரத்து 64 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
எவ்வாறாயினும் இப்படியான நடவடிக்கைகள் காரணமாக இறுதியில் எமது நாட்டுக்கு டொலர் வருவது மற்றும் சுற்றுலாப் பயணிகள் வர வழியில்லாமல் போய் விடும் எனவும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.