இந்தியாவுக்கு கிழவியை குமரியாக காட்டும் ரணிலின் ராஜதந்திரம்
இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொழும்பு கிளர்ச்சியின் விளைவால் ஆட்சி மாற்றத்துக்கு பதிலாக ஆள் மாற்றம் நிகழ்ந்து ரணில் ஜனாதிபதியானார், இந்திய தரப்பு உடனடியாக வாழ்த்துச் செய்தி அனுப்பாது தாமதமாகவே வாழ்த்து அனுப்பி இருந்தது
இந்நிலையில் அழகப்பெரும ஜனாதிபதி நாற்காலியில் அமர்வதையே இந்திய உளவுத்துறை விரும்பியதாக ரணில் இந்திய தூதரகத்திடம் குற்றம் சாட்டி முறைப்பாடு செய்திருந்தார் .
அதனை இந்திய தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் முற்றாக மறுத்தும் இருந்தது.
கரடு முரடான உறவு
இலங்கையில் யார் பதவிக்கு வந்தாலும் அவர்களது முதலாவது வெளிநாட்டு பயணம் புதுடெல்லியாகவே இருக்கும்.
ஆனால் ரணில் பதவிக்கு வந்தபின் அவ்வாறு நிகழவில்லை. இந்தப் பின்னணியில் ரணிலுக்கும் இந்தியாவுக்குமான உறவு ஒரு கரடு முரடானதாக கசப்பு நிறைந்ததாக அமைந்திருந்தது.
அதே நேரத்தில் முற்றிலும் மேற்குலக சிந்தனையுடனும் மேற்குலக ஆதரவாளருமான ரணில் சீனாவுடனான உறவை வலுப்படுத்துவதிலும் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் உறவை புதுப்பிப்பதிலும் மிக அமைதியாக கவனம் செலுத்தி இருந்தார்.
இந்தியாவுக்கு தோல்வி
அப்போது இந்தியா ஈழத் தமிழர் சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்த தொடங்கியது.
அது மட்டுமல்லாமல் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு மேற்கு முனியங்களின் விடயங்களிலும் இந்தியா கடும் அழுத்தத்தை பிரயோகித்தது அவ்வாறே சீனாவின் உளவு கப்பலான யுவான் பாய் அம்பாந்தோட்டைக்கு வருகின்ற போதும் அதனை தடுக்க இந்தியா பலவகைகளிலும் முயற்சித்தது.
அதனை அடுத்து சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கான போர்க்கப்பலம் இலங்கைக்கு வருவதை தடுக்க இந்தியா முயற்சித்தது.
இவ்விரண்டும் இந்தியாவுக்கு தோல்வியை
கொடுத்தது.
இலங்கை எந்த வகையிலும் இந்த இரண்டு கப்பல் விவகாரத்திலும் இந்திய தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற நிலை இருந்த போதும் கூட இலங்கை செவி சாய்க்கவும் இல்லை பணியவும் இல்லை .
ஆனால் இந்தியாவை சமாளிப்பதற்கு ஏற்ப மென்மையாக தடவும் போக்கை இலங்கை கையாளவும் தவறவில்லை.
ராஜதந்திர அழுத்தங்கள்
இந்தப் பின்னணியில் டெல்லி கொழும்புக்கு திட்டவட்டமாக சில கோரிக்கைகளை ரீதியில் முன்வைத்த கடும் அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்தது.
ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, சென்னைக்கும் பலாலிக்குமான விமான போக்குவரத்து, தூத்துக்குடிக்கும் காங்கேசன்துறைக்குமான கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று பெரிதும் வற்புறுத்தியது.
மேலும்
கொழும்பு துறைமுக விவகாரம், யாழ்ப்பாணத்தில் இந்தியாவினால் கட்டிக் கொடுக்கப்பட்ட கலாச்சார மண்டபம் திறக்கப்படல் என்பனவும் வற்புறுத்தப்பட்டன.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய விவகாரம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளடங்கலான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில் இந்த கடும் அழுத்தங்களை சமாளிப்பதற்கு சில சிறிய விட்டுக்கொடுப்புகளை செய்து கிழவியை குமரியாக காட்டவல்ல ராஜதந்திர கலையில் சிங்கள ராஜதந்திரிகள் ஈடுபட்டனர்.
அக்கலையிற் தான் கைதேர்ந்தவர்கள் என்பதை ரணில் தற்போது நிரூபிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்தியாவை சமாளிப்பதற்கான முயற்சியாக சென்னைக்கும் பலாலிக்குமான விமான சேவை மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. இப்போது கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் அதானி குழுமத்திடம் கையளிக்கப்பட்டு விட்டது.
அதற்காக மேற்கு முனையில் இருந்த கடைத்தெருக்கள் தற்போது அகற்றப்பட்டும் வருகிறன.
தூத்துக்குடிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கான ஆயத்தப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஈழத் தமிழர் பிரச்சினை
யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட கலாச்சாரம் மண்டபம் இலங்கை சுதந்திர தினமானத்தை முன்னிட்டுத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. திறப்பு விழாவிற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் வருகை தருவதாகவும் அதற்கு இலங்கை ஜனாதிபதியும் வருகை தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினம் பெப்ரவரி 4 ஆம் திகதி யாயினும் இந்த கலாச்சார மண்டபத்தை இலங்கை சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெப்ரவரி 11 ஆம் திகதி திறப்பதென தமிழர் நிராகரிக்கும் சுதந்திர தினத்துடன் இணைத்து திட்டமிட்டு நாள் குறிக்கப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது.
அத்தோடு ஈழத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றை சுதந்திர தினத்தன்று அறிவிக்கப் போவதாகவும் கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.
இவை எல்லாவற்றையும் மேலெழுந்த வாரியாக பார்க்கின்ற போது இலங்கை அரசு இந்தியாவுக்கு பணிந்து விட்டதாகத் தோன்றும்.
ஆனால் இங்கே இலங்கை அரசு பணிந்ததாக ஒரு தோரணையை மாத்திரமே காட்டுகின்றதே தவிர இலங்கை அரசு பணியவில்லை என்பதுதான் உண்மை.
பொருளாதாரம் நெருக்கடி
இன்றைய இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து மீழ்வதற்கு மேற்குலகத்துடன் ஆதரித்தும் அனுசரித்தும் செல்ல வேண்டும். இந்தியாவுடனும் அனுசரித்துச் செல்ல வேண்டும். அதேநேரத்தில் சீனாவுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் செய்வதன் மூலம்தான் இலங்கை அரசையும் அரசாங்கத்தையும் காப்பாற்றவும் முடியும் .
ரணில் விக்ரமசிங்க தன்னுடைய சிம்மாசனத்தை தொடர்ந்து தக்க வைக்கவும் முடியும் . அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதற்காக அணைத்து வேடங்களையும் போடத் ரணில் சிறிதும் தயங்கவில்லை.
அரசியல் போக்கின் உள்ளோட்டம்
இந்தப் பின்னணியில் இந்த விவகாரங்களை உற்று அவதானித்தால் இந்த அரசியல் போக்கின் உள்ளோட்டத்தை உணர முடியும்.
முதலாவது இலங்கை அரசை இந்திய அரசு இறுக்கிப் பிடித்தால் இலங்கை அரசு வளைந்து கொடுக்கவும் விட்டுக் கொடுக்கவும் முனையும் என்பது புலனாகிறது.
இப்போது இந்தியாவின் கடும் அழுத்தத்தின் காரணமாக இந்தியாவுக்கு பணிந்து போவது போல அல்லது விட்டுக் கொடுப்பவர் போல அதாவது ஒரு மீனவன் தன் வலையில் அகப்பட்ட சுறாவை பிடிப்பதற்கு அதன் போக்கில் ஓடி இறுதியில் லாவகமாக பிடித்து கரை சேர்ப்பது போல ரணிலும் இந்தியாவின் பக்கம் சாய்ந்து ஓடி தன்னிடம் முரண்டு பிடிக்கும் இந்திய திமிங்கலத்தை பிடித்து கரையில் இழுக்க பார்க்கிறார்.
இப்போது ரணில் விட்டுக்கொடுத்தவை போல் தோன்றும் நான்கு விடயங்களும் ஏற்கனவே இருந்தவையும் அல்லது முன்பே ஒப்புக்கொள்ளப்பட்டவையும்தான்.
பலாலி-- சென்னை விமான சேவை கொரணாக் காலம்வரை நடைமுறையில் இருந்த ஒன்றே.
தூத்துக்குடி -- காங்கேசன்துறை விவகாரமும் புதிதல்ல. கொழும்பு மேற்கு முனையம் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டது இப்போ நடைமுறைக்கு வருகிறது.
யாழ்.கலாச்சார மண்டப விவகாரமும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதுவும் இப்போது நடைமுறைக்கு வருகிறது. இவற்றில் எதுவும் புதிதல்ல.
இராஜதந்திரக் காய் நகர்த்தல்கள்
ஆனால் தான் இந்தியாவின் கோரிக்கைப்படி ஏதோ செய்வதாக காட்டி இந்தியாவைத் திருப்திப்படுத்தி தன் இராஜதந்திரக் காய்களை முன்னெடுக்கும் களநிலைத் தயாரிப்பில் முன்னேறுகிறார்.
வெளிவிவகார விடயங்களில் முக்கோண பிரச்சனைகளை கையாள்வதில் இலங்கை சாதரியமாக செயல்படுகிறது. மேற்குலகை அனுசரித்து போவதில் இந்தியாவிற்கு மனச்சங்கடங்கள் இருந்தாலும் அதனை முற்றிலும் இந்தியா ஆட்சேபனை செய்யாது .
ஏனெனில் மேற்குலகத்துடன் தனது நலன்களை இந்தியா பங்கு போட்டுக் கொள்ளும். எனவே அந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு பிரச்சனை பெரிதாக இல்லை. அவ்வாறே மேற்குலகத்துடன் இந்தியாவிடம் இலங்கை அனுசரித்துப் போவதும் சிறிய விட்டுக் கொடுப்புகளை செய்வதிலும் சீனாவிற்கும் எந்த பிரச்சனையும் கிடையாது.
சீனாவின் ஆழமான காலூன்றல்
ஏனெனில் சீனா ஏற்கனவே இலங்கையில் அம்பாந்தோட்டடைத் துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு பெற்றுவிட்டது. அதுவும் பார்க்க போனால் இலங்கை தீவில் நான்கு தலைமுறைகள் உடைய காலகட்டத்தில் தொடர்ந்து சீனா நிலை பெற்றிருப்பதற்கான ஆழமான காலூன்றலாக அது இருப்பதனால் சீனாவுக்கு அதில் எந்த விதமான கவலையும் கிடையாது.
அது மட்டுமல்லாமல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனியத்தையும் அது நிரந்தரமாக பெற்றுவிட்டது.
அதே நேரத்தில் சீனா இலங்கையின் வடக்குக் கிழக்கிலும் பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் வலுவாக காலூன்ற தொடங்கிவிட்டது. அதனையும் இந்தியாவால் தடுக்க முடியவில்லை தடுக்கவும் முடியாது .
சீனாவும் கொழும்பை வலுவாக நம்புகிறது. எனவே சீனாவுக்கும் இலங்கைக்குமான வலுவான ஆழமான அந்த உறவில் விரிசல்கள் ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. இந்தியாவுக்கு இலங்கை அரசு செய்கின்ற விட்டுக் கொடுப்புகளை பற்றி சீனா கண்டு கொள்ளப் போவதுமில்லை.
ஏனெனில் சீனா இலங்கையிலிருந்து எதைப் பெற வேண்டுமோ அதை பெறுவதிலேயே முனைப்பாகவும் அக்கறையாகவும் உள்ளது. எனவே இலங்கை இந்தியாவுடன் ஒத்துப் போவதில் சீனாவுக்கு எந்த கவலையும் கிடையாது. எனவே மூன்று வல்லரசுகளுக்கு இடையான உறவுகளை சுமூகப்படுத்துவதற்கு இந்தியாவிற்கு சிறிய விட்டுக்கொடுப்புகளை செய்வதன் மூலம் முக்கோண உறவில் உள்ள முட்டுக்கட்டையை இல்லாமல் செய்திட முடியும்.
மும்முனைப் போட்டி
ரணில் விக்கிரமசிங்க இந்த மும்முனைப் போட்டியை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி சிங்கள தேசத்தை நிலை நிறுத்துவதில் முன்னோக்கிச் செல்கிறார்.
இந்த விவகாரத்தில் இந்தியா கோபப்படாமல் இருக்க செய்வதற்கான அனைத்து வேலைகளையும் இலங்கைக்கு பாதகம் இல்லாத வகையில் நகர்த்திச் சொல்வதுதான் அவருடைய ராஜதந்திரமாக உள்ளது. இப்போது இந்தியாவுக்கு ரணில் விக்கிரமசிங்க சில விட்டுக்கொடுப்புகளை செய்திருக்கிறார்.
ஆனால் இந்த விட்டுக்கொடுப்புகள் எதுவும் அடிப்படையானவை அல்ல. கொழும்பு துறைமுகத்திற்கு கிழக்கு மேற்கு முனைய பிரச்சனையில் மேற்கு முனையம் ஏற்கனவே இந்தியாவிற்கு கொடுப்பதாக ஏற்பாடுள்ளது.
ஆனால் இவ்வளவு காலமும் கிடப்பில் கிடந்த. அந்த விடயம் இப்போது நடைமுறைக்கு வருகிறது என்பதே உண்மை எனவே அதனை இப்போது தூசி தட்டி புதுப்பித்துக் காட்டி ஏதோ ரணில் புதிதாக செய்துவிட்டார் போன்ற ஒரு காட்சி காண்பிக்கப்படுகிறது.
அவ்வாறே பலாலிக்கும் சென்னைக்குமான விமான போக்குவரத்து விவகாரமும். அடுத்த வேடிக்கை என்னவெனில் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் கட்டப்பட்டுவிட்டது கட்டப்பட்ட மண்டபம் திறக்கப்படத் தானே வேண்டும் இதில் என்ன புதுமை இருக்கிறது கட்டப்பட்டால் என்றோ ஒரு நாள் திறக்கப்பட்டே ஆகவேண்டும்.
இது பொதுவான விடயம் ஆனால் இந்தக் கட்டடத்தை திறப்பு செய்வதற்கு அந்தக் கட்டடத்திற்கான மின்சார கட்டணம் யார் கொடுப்பது என்ற ஒரு சிறிய பிரச்சனையை தூக்கி பிரமாண்டமாக காட்டி அதனை தடுத்து நிறுத்தி வைத்திருந்ததுதான் சிங்களத்தின் ராஜதந்திரம்.
திறக்கப்படாமல் இருந்தது ஒரு நிர்வாக நடைமுறை பிரச்சினையே அன்றி அது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல. இப்போது அதை திறக்கிறோம் என்று சொல்லி அதனை ஒரு பெரிய விடயமாக "பேனைப் பெருச்சாளியாக" காட்ட முற்படுகிறார்கள்.
தமிழருக்கான தீர்வு திட்டம்
இப்போது இலங்கை இன பிரச்சனை சார்ந்து தமிழருக்கான தீர்வு திட்டம் சார்ந்து ரனில் விக்கிரமசிங்க மிகக் கடுமையாகவே உள்ளார். அதில் அவர் எந்த விட்டுக்கொடுப்புகளையும் செய்யவில்லை .
இலங்கை இன பிரச்சனைக்கு வெளியார் தலையீடு தேவையில்லை என்பதில் அவர் இறுக்கமாகவே உள்ளார்.
அதற்கு மேற்குலகத்தின் எரிக்சொல்கேமையும் தன் பக்கம் வைத்துக் கொண்டு அவர் வாயினாலும் அதனைச் சொல்ல வைக்கின்றார். இதுவே அரசியல் ராஜதந்திரத்தில் மிக நுணுக்கமான இடம்.
இலங்கை தடுப்பதற்கான முக்கிய இடம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியா 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கேட்கிறது. ""நாங்கள் அதை மறக்கவில்லை"" என்று ரணில் சொல்வதன் மூலம் இந்தியாவின் வாயையும் பொத்தி விடுகிறார்.
சுதந்திர தினத்தை அடுத்து பத்தாம் பதினொன்றாம் திகதிகளில் தமிழ் அரசியல் தலைமையுடன் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு பற்றி பேசப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இந்த விடயத்திலும் அந்நிய தலையீடு என்ற அடிப்படையில் இந்தியாவை வெளியே தள்ளி உள்ளகத்துக்குள் ஒரு தீர்வை பேசப் போவதாக கூறுவதன் மூலம் தமிழ் மிதவாத தலைமையுடன் பேசி அவர்களுக்குச் சலுகைகளை காட்டி காலத்தை இழுத்தடித்து தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளையும் இருப்பையும் சிதைப்பதில் சிங்கள தேசம் மிகத் தெளிவாக இருக்கிறது
இங்கே அமெரிக்க இந்திய சீன உறவில் ரணில் திட்டவட்டமான முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டார். அந்த முடிவுக்கு அமைவாகவே அவர் தொழிற்படுகின்றார்.
நடைமுறையில் ஏற்படுகின்ற நெழிவு சுளைவுகளுக்கு ஏற்ற மாதிரி பல்வேறு வேடங்களை தரித்து மாயா ஜால வித்தை காட்டுகிறார்.
இப்போது முக்கிய நான்கு விடயங்களில் இந்தியாவிற்கு இலங்கை விட்டுக்கொடுத்தது போன்ற ஒரு தோற்றப்பாடு காட்டப்படுகிறது.
ஆனால் அடிப்படையான எந்த விடயத்திலும் ரணில் விக்கிரமசிங்கா விட்டுப் கொடுப்புக்களை செய்யவில்லை. இவை வெறும் நிர்வாக நடைமுறைகள் சார்ந்த விட்டுக் கொடுப்புகளாகவே அமைந்திருப்பதை காணலாம்.
அதுவும் அப்படி விட்டுக் கொடுப்பக்களுக்கான மூல காரணமாக இருப்பது ஈழத் தமிழர் பிரச்சனையை இந்தியா கையில் எடுத்துக் கொண்டு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதைத் ததவிர்ப்பதற்கே. எனவே இலங்கையில் இந்தியாவின் பிடி என்பது இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்சனை இருக்கும் வரைக்கும்தான் இருக்கும் என்பதுதான் இங்கே முக்கியமானது.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
