பிறந்த நாளை கொண்டாடும் கோட்டாபய ராஜபக்ச! குவிக்கப்பட்டுள்ள பெருமளவான இராணுவத்தினர்
கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த நாளை கருப்பு தினமாக அனுஸ்டித்து காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் ஏனைய இரண்டு நுழைவாயில்களையும் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் நுழைவாயில்களுக்கு முன்பாக கூடாரங்களை அமைத்து விண்ணதிரும் கோஷங்களுடன் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன்,தற்போது இரண்டு பேருந்துகளில் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 73 ஆவது பிறந்த நாளை இன்றைய தினம் கொண்டாடும் நிலையில்,ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தயாராகி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த தினத்தை கருப்பு தினமாக அனுஸ்டிக்க போராட்டக்காரர்கள் தயாராகி வரும் நிலையில்,பெருமளவிலான இளைஞர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது காலிமுகத்திடல் போராட்ட குழு எதிர்ப்பு பதாகைகளை தாங்கியவாறு மற்றுமொரு நுழைவாயிலை முற்றுகையிட்டுள்ளதுடன்,அங்கு எதிர்ப்பு பதாகைகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.