பொருட்களின் விலை உயர்வு போன்று தொடரும் அமைச்சர்களின் எண்ணிக்கை! சுனில் ஹந்துனெத்தி ஆவேசம்
நாட்டில் ஒரு பக்கம் பொருட்களின் விலைகளை அதிகரித்துக்கொண்டு மறுபக்கம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு பணவீக்கம்
நாட்டில் ஒரு பக்கம் பொருட்களின் விலைகளை அதிகரித்துக்கொண்டு மறுபக்கம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறு இரண்டு பக்கமும் பணவீக்கம் அதிகரித்து வருகின்றது. பொருட்களின் பணவீக்கம் 94 சதவீதமாக காணப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் 225 பேரில் நான்கில் ஒருவர் அமைச்சராக இருக்கின்றனர். அதேபோன்று அமைச்சரவையில் 25 சதவீத அமைச்சு பணவீக்கம் காணப்படுகின்றது. ஆளும் கட்சியில் 37 சதவீத அமைச்சு பணவீக்கம் காணப்படுகின்றது.
பொருட்களின் விலை அதிகரிப்பு போன்று அமைச்சர்களின் அதிகரிப்பும் முடிவின்றி தொடர்கின்றது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் நிலைத்தன்மைக்காகவே அமைச்சுப் பதவிகள்
இது தொடர்பில் உரையாற்றிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட, நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை உருவாக்குவதற்காகவே அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதாக பதிலளித்துள்ளார்.
நாட்டில் அரசியல் நிலைத்தன்மையிலான நம்பிக்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றே அமெரிக்க சர்வதேச உதவி திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர் கூறினார்.
இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அனைத்து துறைகளுக்கும் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் கடந்த ஜூன் 22 ஆம் திகதி 20 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அத்துடன் கடந்த எட்டாம் திகதி 37 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மேலும் 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.