இலங்கையில் நீடிக்கும் தட்டுப்பாடுகள்: உணவு வியாபாரங்களை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை
நாட்டில் நிலவும் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலையேற்றம் காரணமாக 30 சதவீதமான உணவகங்கள் மற்றும் 50 சதவீதமான பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உணவகங்கள் மூடப்பட்டுள்ளன
மேலும்“ பாண், கோதுமை மா, முட்டைகள், கோழி இறைச்சி மற்றும் மீன்களுக்கு சந்தையில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக நாட்டிலுள்ள 30,000 உணவகங்களில் சுமார் 10,000 உணவகங்கள் தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் சுமார் 3000 அரச நிறுவனங்களின் சிற்றுண்டிச்சாலைகளும் 4600 பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளும் காணப்படுகின்றன.
அத்துடன் மேற்குறிப்பிட்ட பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக திருமண விழா மற்றும் மரண சடங்கு வீடுகளுக்கு கெட்டரிங் சேவைகளை (catering) வழங்குதல் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக வீடுகளில் சிறுதொழில் வியாபாரமாக முன்னெடுக்கப்படும் கேக் மற்றும் இதர உணவு பொருட்களின் உற்பத்தியும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. வீதியோர உணவு (Street food sales) விற்பனையும் முடிவுக்கு வந்துள்ளது.
நிர்வாக செலவு அதிகரிப்பு
அத்துடன் கட்டிட வாடகை செலுத்தல், ஊழியர்களுக்கான சம்பள கொடுப்பனவுகளை வழங்க முடியாமை காரணமாக பொருமளவிலான சுற்றுலா விடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள் மற்றும் வீதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக விற்பனை நிலையங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
உணவுகளை அதிக செலவில் தயாரித்தாலும் அதனை அதிக விலையில் விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.