போக்குவரத்து சங்கங்களின் உறுப்பினர்கள் லீசிங் தவணையை புறக்கணிக்க முடிவு
போக்குவரத்து சங்கங்களின் உறுப்பினர்கள் 15 இலட்சம் பேர் தங்கள் வாகனங்களுக்கான லீசிங் தவணையை செலுத்தாமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
அகில இலங்கை போக்குவரத்து தொழிலாளர்களின் சங்கத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் 15 இலட்சம் உறுப்பினர்களே இவ்வாறு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சம்பத் ரணசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
தற்போது தங்களது அங்கத்தவர்களின் பேருந்து, வேன், ஆட்டோ உள்ளிட்ட பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து, அலுவலக ஊழியர்கள் போக்குவரத்து மற்றும் லொறி உள்ளிட்ட ஏனைய வாகனங்கள் தற்போதைக்கு எரிபொருள் நெருக்கடி காரணமாக பெரும் வருமான இழப்பைச் சந்தித்துள்ளன.
நாளாந்தம் சேவையில் ஈடுபடும் 20 வீதமான வாகனங்கள்
குறிப்பாக நாளாந்தம் 20 வீதமான வாகனங்கள் மட்டுமே தற்போதைக்கு சேவையில் ஈடுபடுத்தக் கூடியதாக உள்ளது.
எரிபொருள் பற்றாக்குறைக்கு இன்னும் இரண்டு வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் தங்கள் சேவைகளைப் புறக்கணிக்க நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும், அதே நேரம் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை தங்களது சங்கத்தின் 15 இலட்சம் அங்கத்தவர்கள் தத்தமது வாகனங்களுக்கான லீசிங் தவணைத் தொகையை செலுத்தாமல் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும் சம்பத் ரணசிங்க தெரிவித்துள்ளார்.