இலங்கைக்கு பாரிய தொகை விதை சோளம் தொகுதியை தருவிக்க நடவடிக்கை
இலங்கையின் நீண்டகால அபிவிருத்தி பங்காளியான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித்திட்டம், அவசரகால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடுத்த மாத இறுதிக்குள், பாரிய தொகை விதை சோளம் தொகுதியை இலங்கைக்கு தருவிக்க எதிர்பார்த்துள்ளது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜெய்க்கா, சுமார் 200 மெட்ரிக் தொன் (200,000 கிலோ) விதை சோளத்தை கொள்வனவு செய்ய நிதியுதவி செய்கின்றது என்று ஐக்கிய நாடுகளின் நிறுவனம் அறிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு சோள விதை விநியோகம்
இலங்கையின் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பொறுப்பதிகாரி மாலின் ஹெர்விக் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விதை சோளத்தை அக்டோபர் 30 ஆம் திகதிக்குள் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கான நோக்கத்தை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் கொண்டுள்ளது.
இதற்காக ஜப்பானிய நிதி நிறுவனம் 1.4 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ. 506.8 மில்லியன்) பணத்தை பங்களிப்புச் செய்துள்ளது.
இலங்கையில் கால்நடைகள் மற்றும் உணவு உற்பத்தி
இலங்கையில் கால்நடைகள் மற்றும் உணவு உற்பத்தியின் விநியோக சங்கிலி மக்காச்சோள விதைகளின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் விவசாய அமைச்சும், விவசாயத்துறையும் பல ஆண்டுகளாக விதை சோளம் மற்றும் மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்கத் தவறி வருகின்றன.
இதேவேளை முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகேவின் காலத்தில் 100 ஏக்கரில் விதை சோள உற்பத்திக்காக 33.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
எனினும்
2021 இல் 40,000 கிலோ விதையே பெற்றுக்கொள்ளப்பட்டது.
இருப்பினும் அந்த காலப்பகுதியில் அலுத்கமகேவின் ஊழியர்களுக்கு மாத்திரம் 40.7
மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.