கடன் அட்டைகளை பயன்படுத்தி 18 வயது இளைஞன் செய்த மோசமான செயல்!பொலிஸார் வெளியிட்ட தகவல்
குளியாபிட்டிய பிரதேசத்தில் மற்றவர்களின் கடன் அட்டைகளின் தரவுகளைப் பயன்படுத்தி இணையத்தில் சுமார் 55 இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவுக்கு பெரும் நிறுவனமொன்றில் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் 'சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்' நீண்ட விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பல்வேறு நபர்களுக்கு சொந்தமான அட்டைகளின் தரவுகளை பயன்படுத்தி 28 இலட்சம் ரூபாவிற்கு இணையத்தில் பரிவர்த்தனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடன் அட்டைகளை பயன்படுத்தி மோசடி
11ம் தர கல்வியை மாத்திரம் பெற்றுள்ள இவர், கூலி வேலை செய்யும் போது இணையம் ஊடாக கணனி தொழில்நுட்ப அறிவையும் பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து சிறிய கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி வெளிநாட்டு தரவுகளை 'ஹேக்' செய்ய முயற்சித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் முதலில் 50 ரூபாய்க்கு ரீலோட்செய்து இந்த மோசடியை முயற்சித்து வெற்றி பெற்றார். படிப்படியாக அதிக விலைக்கு பல்வேறு பொருட்களை ஆன்லைனில் பதிவு செய்து வந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சந்தேகநபரின் கணனியை பரிசோதித்த போது, வெளிநாட்டு கடன் அட்டைகளின் சுமார் ஐந்து இலட்சம் தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதும், சந்தேகநபர் 2021ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதல் இந்த மோசடிச் செயலைச் செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
பெரும்பாலான பொருட்களை சந்தேகநபர் போலி முகவரி மூலம் ஆன்லைனில் கொண்டு வந்ததால், பொருட்களை டெலிவரி செய்ய முடியாமல் போனதால், டெலிவரி செய்பவர் போன் செய்து, 'நான் அருகில் இருக்கிறேன். சரக்குகளை வாங்கி வந்து தருவதாக கூறி டெலிவரி தொழிலாளியை அணுகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.