இறுக்கமான நாணய கொள்கை! பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த பெப்ரவரி மாதம் 50.6 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம் கடந்த மார்ச் மாதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
50.3 சதவீதமாக இந்த பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி கடந்த பெப்ரவரியில் 54.4 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் மார்ச்சில் 47.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்ததுடன், பெப்ரவரி மாதம் 48.8 சதவீதமாகப் பதிவான உணவல்லாப் பணவீக்கம் மார்ச் மாதம் 51.7 சதவீதமாக உயர்வடைந்திருக்கின்றது.
பணவீக்கம் வீழ்ச்சி
மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் கடந்த பெப்ரவரி மாதம் 02.92 சதவீதமாகக் காணப்படுவதுடன் இதற்கு உணவல்லாப்பொருட்களின் விலைகளில் 3.71 சதவீதமாக அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்துள்ளன.
இருப்பினும் உணவுப்பொருட்களின் விலைகள் 0.79 சதவீத மாதாந்த வீழ்ச்சியைப் பதிவுசெய்தன.
அதேவேளை பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த பெப்ரவரியில் 43.6 சதவீதத்திலிருந்து மார்ச் மாதம் 39.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில் அண்மையகாலங்களில் பின்பற்றப்பட்டுவரும் இறுக்கமான நாணய மற்றும் இறைக்கொள்கையின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ள பணவீக்கமானது இவ்வாண்டு முழுவதும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.