தையிட்டி விகாரை விவகாரத்தில் தமிழ் மக்களின் உறுதிப்பாடு அவசியம் - அ.யோதிலிங்கம்
தையிட்டி விகாரை அகற்றப்படும் வரை நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது தமிழ் மக்கள் அனைவரினதும் கடமையாகும் என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கட்டுரையில்,"தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் மக்கள் மயமாதல் என்ற நிலையிலிருந்து சர்வதேசமயமாதல் என்ற நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
போராட்ட முயற்சிகள்
லண்டனிலும், தமிழ்நாட்டிலும் இது தொடர்பாக கண்டன போராட்டங்கள் இடம்பெற்றுள்ளது. கனடாவில் போராட்டத்திற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

தாயகத்தில் போராட்ட சூழல் அதிகரிக்கும்போது தமிழ்நாட்டின் ஏனைய இடங்களிற்கும், பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், அவுஸ்ரேலியா போன்ற புலம்பெயர் மக்கள் வாழும் நாடுகளிற்கும் போராட்டம் பரவலாம்.
எல்லாவற்றிற்கும் முக்கியம் தாயகத்தில் இப் போராட்ட சூழலை அணைய விடாமல் வைத்திருப்பது தான். தாயகத்தில் தற்போது சகல மட்டங்களிற்கும் பரவத் தொடங்கியுள்ளது.
நீதிமன்றங்களில் இதன் சகல பரிமாணங்களும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. மூன்று சட்டத்தரணிகளும் வெவ்வேறு கோணங்களில் இதனை விவாதத்திற்குள்ளாக்கியுள்ளனர்.
சுமந்திரன் சட்ட விரோத கட்டிடத்தை அகற்றும் அதிகாரம் பிரதேச சபைக்குரியது சட்டத்தை நடைமுறைப்படுத்த முனையும் போது பொலிசார் சட்ட விரோதமாக நடந்து கொள்கின்றார்கள் என்ற வகையில் விவாதத்தினை கொண்டு சென்றார்.
சட்டத்தரணி சிறீகாந்தா அரசாங்கம் மாறினாலும் அமைதிவழி போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை மாறவில்லை என்ற வகையில் விவாதத்தினை கொண்டு சென்றார்" என குறிப்பிட்டுள்ளார்.