பிரித்தானியாவில் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் குடும்பம்!
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தமிழ் குடும்பத்தினர் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி கார்டியன் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 வயதான பிரபல தமிழ் விஞ்ஞானி ஒருவரும் அவரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுமே இவ்வாறு நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த நபர் 2018ம் ஆண்டு பிரித்தானியாவிற்கு வந்த நிலையில், 2019ம் ஆண்டு தனது நோய்வாய்ப்பட்ட தாயைப் பார்க்க மீளவும் இலங்கை வந்துள்ளார். இதன்போது அவர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் விடுவிக்கப்பட்ட அவர் மீளவும் பிரித்தானியா திரும்பினார், இதனையடுத்து இலங்கை வந்தபோது தான் அனுபவித்த துன்பத்தின் அடிப்படையில் தஞ்சம் கோரினார்.
எனினும், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த குடும்பத்தினர் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்பத்தினர் பிரிஸ்டலில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததுள்ளனர். எவ்வாறாயினும், கடந்த மாதம் பிரிஸ்டலில் உள்ள வாடகை விடுதியில் இருந்து இந்த குடும்பத்தினர் லண்டன் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உள்துறை அலுவலகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், குறித்த குடும்பத்தினர் தற்போது நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். இது குறித்து உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில்,
"அனைத்து புகலிடம் மற்றும் மனித உரிமை கோரிக்கைகள் எங்கள் சர்வதேச கடமைகளுக்கு ஏற்ப அவர்களின் தனிப்பட்ட தகுதிகளில் கவனமாக பரிசீலிக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.