வெளிநாடு ஒன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்
சீசெல்ஸ் (Seychelles) நாட்டில் கொலை செய்யப்பட்டுள்ள இலங்கை பிரஜையின் கொலை சம்பந்தமாக அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சீசெல்ஸ் நாட்டின் லாடிகூ (La Digue) தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த 47 வயதான ஹரிந்திர பொன்னவிலகே டொன் ( Harindra Ponnawilage Don) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இறந்து கிடந்த நிலையில் கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி காலை 8.50 அளவில் பொலிஸார் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த இலங்கையர் நான்கு நாட்களாக வேலை செல்லாத காரணத்தினால், அவரை தேடி அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றதாக கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு சென்ற போது அங்கு யாரும் இருக்கவில்லை எனவும் இலங்கை நபர் தங்கியிருந்த அறையின் யன்னல் வழியாக பார்த்த போது, அவர் தரையில் கிடந்தார் எனவும் பெயரை கூறி அழைத்த போதும் அவரை பதிலளிக்காததால் பொலிஸாருக்கு அறிவித்ததாக கட்டுமான நிறுவன உரிமையாளர் கூறியுள்ளார்.
வீட்டில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் உடலில் மரணத்திற்கான எவ்விதமான அடையாளங்களும் கண்டறியப்படவில்லை.
இதனையடுத்து மூன்று நாட்களுக்கு பின்னர் நடத்திய பிரேதப் பரிசோதனையில் இலங்கை நபர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக பொலிஸார் கொலை வழக்கை பதிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் கொலை தொடர்பாக இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகள் தொடர்ந்தும் நடப்பதாக சீசெல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.