ஜனாதிபதி ரணிலின் பின்னணியில் இருந்து செயற்படும் நபர்கள்
இன்றைய அரசாங்கத்தின் பின்னணியில் ராஜபக்சர்களே உள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ரணிலின் பின்னால் ராஜபக்சர்கள்
சர்வதேச பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அமைச்சர் அலி சப்ரி கூறியது ஆச்சர்யப்படக்கூடிய விடயம் ஒன்றல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
ஏனென்றால் முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் ஒன்றுதான். தற்பொழுது ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் ராஜபக்சர்கள் இல்லாவிட்டாலும் இன்றைய அரசாங்கத்தின் பின்னணியில் ராஜபக்சர்கள் தான் இருக்கின்றார்கள்.
ராஜபக்சர்களின் தயவில் ஆட்சிக்கு வந்த ரணில்
ராஜபக்சர்களின் கட்சியிலுள்ளவர்கள் வாக்களித்த காரணத்தினாலேயே ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதி ஆசனத்தில் அமர முடிந்தது. ஆகவே ராஜபக்சர்களின் தயவில் தான் ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார்.
அந்த அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னால் ராஜபக்சர்கள் இருப்பதாக முன்வைக்கப்படும் கருத்து தொடர்பில் ஆச்சர்யப்படுவதற்கில்லை என மேலும் கூறினார்.