பிரான்ஸில் சாதனை படைத்த இலங்கை வம்சாவளி மாணவன்
பிரான்ஸின் கயன்கோர்ட் (Guyancourt) நகராட்சியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயதுடைய இலங்கை வம்சாவளி மாணவர் பிலால் லுக்மான் (Bilaal Lookman) நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் பிரான்ஸின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
அரசியல் ரீதியான கலந்துரையாடல்களில்
மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸில் பிறந்த பிலால் லுக்மான், தற்போது பாரிஸ்-பந்தியோன்-அசாஸ் (Paris-Panthéon-Assas) பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்ட மாணவராகப் பயின்று வருகிறார்.

கடந்த மார்ச் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற பிரான்ஸ் நகராட்சித் தேர்தல்களில், அவர் தனது முதல் வாக்கைப் பதிவு செய்த அதேவேளை, வேட்பாளராகவும் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். தற்போது பதவியில் உள்ள மேயரின் அணியில் இணைந்து அவர் இந்தப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டார்.
சிறு வயது முதலே பொது விவகாரங்களில் அதீத ஆர்வம் காட்டிய பிலால், தனது 15 மற்றும் 16 வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகம், முன்னாள் கல்வி அமைச்சரின் அலுவலகம் மற்றும் உள்ளூர் மேயரின் அலுவலகம் ஆகியவற்றில் பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத் தலைவர் மற்றும் பல இராஜதந்திரிகளுடனும் அரசியல் ரீதியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்த
"நாம் எங்கிருந்து வருகிறோம் அல்லது நாம் தேர்ந்தெடுத்த பாதை என்ன என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றிணைந்து எதைக் கட்டியெழுப்பத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதே முக்கியம்," என்று அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறிய லுக்மான், "அரசியல் பயனற்றது என்று மக்கள் நினைப்பதை நிறுத்த வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது கல்விப் பணிகளுக்கு மத்தியில், ஒரு மக்கள் பிரதிநிதியாக இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தவும் சமூக மேம்பாட்டிற்காகவும் உழைப்பதே தனது இலட்சியம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2017 முதல் தாக்குதல் திட்டம்! பிள்ளையான் - சுரேஷ் சாலே குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள்