தென் சூடான் நோக்கி புறப்பட்ட இலங்கை இராணுவ குழு - காரணம் என்ன?
இலங்கை இராணுவ வைத்திய படையின் 8வது குழு, தென் சூடானிலுள்ள சிறிமெட் தரம் – 2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான இன்று அதிகாலை நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப்படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் வாழ்த்துக்களுடன், குழு தளபதி லெப்டினன்ட் கேணல் என்.எம் நிஃப்லர் மற்றும் இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் டி.வை.எஸ் குமார தலைமையில் இன்று நாட்டிலிருந்து குறித்த குழுவினர் வெளியேறியுள்ளனர்.
இந்த குழுவில் 4 மருத்துவ நிபுணர்கள் மற்றும் 13 அதிகாரிகள் உட்பட 66 இராணுவ வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஏற்கனவே தென் சூடானில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காகச் சென்றிருக்கும் 7வது இலங்கைக் குழு, ஐ.நாவின் விதிமுறைகளுக்கு இணங்க தமது சேவைக்காலம் முடிந்தவுடன் விரைவில் நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்சூடான் நாட்டில் மேற்படி ஐநா பொதுச் செயலாளரின் பிரதிநிதிகள் தலைமையில் அமைதி காக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, கலவரத்தினால் சவால்களை எதிர்கொண்டிருக்கும் தென் சூடான் நாட்டில் இராணுவ வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பணியாளர்கள் அடங்கிய ஆயிரக் கணக்கிலான குழுவினர் நீள நிற தலைக் கவசங்களுடன் நிலை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.