வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள குற்றவியல் கும்பலின் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே என்பவரின் துப்பாக்கிதாரியாக செயற்பட்டதாகக் கூறப்படும், பொம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன என்ற மாட்டியா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் பதிவு
பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதை தொடர்ந்து நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சிவப்பு எச்சரிக்கை
சந்தேக நபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என்பதோடு, இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலும் விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22ஆம் திகதி கம்பஹா நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து, பஸ்பொட்டா' எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் அவருடன் இருந்த மற்றொருவரை சுட்டுக்கொலை செய்துள்ளார்.
அங்கிருந்த மேலும் சிலரை துப்பாக்கி சூடு மூலம் காயப்படுத்தியமை ஆகியவை இவர் மீதான பிரதான குற்றச்சாட்டாகும்.