வெளிநாட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - தந்தை வெளிப்படுத்திய தகவல்கள்
ஜப்பானில் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதி பெற்றுத் தருவதாக டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.
மகனின் எதிர்பாராத மரணத்தால் குடும்பமே நிலைகுலைந்துள்ளதாக தந்தையான ஜே.ஏ. லயனல் சுசந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
வளமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் தனது மகன் ஜப்பான் சென்ற நிலையில், இப்படியான துயரம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இளைஞன் கொலை
கடந்த எட்டாம் திகதி ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள நகரேயாமா நகரில் இடம்பெற்ற மோதலில் 21 வயதுடைய பிரவீன் இசுரு கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வழமையாக தாய், தந்தையுடன் உரையாறும் பிரவீன் அன்றைய தினம் தொலைபேசி அழைப்பை எடுக்காத நிலையில் அவரை பெற்றோர் தேடியுள்ளனர்.
எனினும் மகனிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காமையினால், தாய் மிகவும் கவலையடைந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு இலங்கையர் கைது
கடந்த 11 ஆம் திகதி பெருமளவில் எதிர்பார்த்திருந்தும் மகனிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. காலை 11:20 மணியளவில் பிரவீனின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து வந்த அழைப்பில் வேறு ஒருவரை உரையாடினார்.

வன்முறை சம்பவம் ஒன்றில் சிக்கிய பிரவீன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதனை நம்ப முடியவில்லை. ஒரு மணி நேரத்தின் பின்னர் அடுத்த அழைப்பில் பிரவீன் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
அந்த கணம் குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. அதிலிருந்து இன்னமும் மீளவில்லை என தந்தை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், சிபா மாகாணத்தின் நகரேயாமா நகரில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற இந்த கத்திக்குத்துச் சம்பவத்தினாலேயே பிரவீன் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த கொலை முயற்சி தொடர்பில் மற்றொரு இலங்கையர் ஜப்பானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.