யாழ்.உணவகத்திலிருந்து மோடிக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது! வரதராஜபெருமாள் ஆதங்கம்
இலங்கை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியாவுடனான தங்கள் ஈடுபாட்டை முடுக்கிவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஏ.வரதராஜபெருமாள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கோவையில் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இதனை கூறியுள்ளார்.
மோடிக்கு கடிதம்
மேலும் கூறுகையில்,1983-87 காலப்பகுதியில் இலங்கையின் தமிழ் கிளர்ச்சிக் குழுக்களும் கட்சிகள், புதுடெல்லி மற்றும் தமிழ்நாட்டிலுள்ள இந்திய தலைவர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்ததை, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) முன்னாள் தலைவர் வரதராஜப்பெருமாள் நினைவு கூர்ந்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விருந்தகத்தில் இருந்து கொண்டு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினால் மட்டும் பலன் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
1983 மற்றும் 1990 க்கு இடையில் உரிய விடயங்களை செய்ய முடியவில்லை என்றாலும், தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்திற்கும் பொறுப்பு உள்ளது.
இலங்கை தமிழர் தீர்வு விடயத்தில் இந்திய அரசாங்கம், தனித்து செயல்பட முடியாது. அதற்கு இந்திய மக்கள் மற்றும் தலைவர்களின் ஆதரவு தேவை.
அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்விற்காக இந்தியாவிற்குள் குரல் கொடுக்கப்பட வேண்டும். புதுடில்லி மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களுடன் இலங்கையின் தமிழ்த் தலைவர்கள் நெருங்கிய உறவைப் பேணினால் மட்டுமே இது சாத்தியமாகும். எனவே, முதன்மைப் பொறுப்பு அவர்களைச் சார்ந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ஏதிலிகள்
இதேவேளை 13 வது திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த விஷயத்தை ஆய்வு செய்ய இந்திய அரசாங்கம் சட்ட வல்லுநர்கள் குழுவை அமைக்க வேண்டும். அத்துடன் திருத்தத்தின் 'சரியான செயல்படுத்தலை' எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதை இலங்கைக்கு தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் வாழும் இலங்கை ஏதிலிகள்; தொடர்பான பிரச்சினையை மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டும்.
இந்தியக் குடியுரிமைக்கான கோரிக்கை கடைசியாகக் கருதப்பட்டாலும், முதலில் கவனிக்கப்பட வேண்டிய 'அழுத்தமான சிக்கல்கள்' இருக்கின்றன.
இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ முறையான வேலைவாய்ப்பை பெற விரும்புபவர்களுக்கு இந்திய அரசாங்கம் தனித்தனியாகவோ அல்லது இலங்கை அரசாங்கத்துடன் கூட்டாகவோ நிரந்தர ஆவணங்களை வழங்க முடியும்.
அதேபோல், ஏதிலிகளுக்கு வீட்டு வசதிக்காக சொத்து வாங்கும் உரிமையை வழங்க முடியும். முகாம் ஏதிலிகள் இலங்கைக்கு வருவதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.