தொற்றுநோய் காரணமாக இலங்கையின் வறுமை 27 வீதத்தினால் அதிகரிப்பு
2022 ஆம் ஆண்டு தொற்றுநோய் காரணமாக இலங்கையின் வறுமையை 27 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்ஸ்பாம் தன்னார்வு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான 2022 அர்ப்பணிப்பு சுட்டெண்ணில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 அர்ப்பணிப்பு சுட்டெண்
2022ஆம் ஆண்டுக்கான சமத்துவமின்மையை குறைப்பதற்கான அர்ப்பணிப்பு சுட்டெண்ணின் படி, 161 நாடுகளில், அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், பங்களாதேஸ் 107 ஆவது இடத்தையும், இலங்கை 111 வது இடத்தையும் பெற்றுள்ளன.
நேபாளம் 112 வது இடத்தையும், பூட்டான் 116 வது இடத்தையும் இந்தியா 123வது இடத்தையும், பாகிஸ்தான் 126 வது இடத்தையும்,; ஆப்கானிஸ்தான் 138 வது இடத்தையும் பெற்றுள்ளன.
இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2020 ஆம் ஆண்டு சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான அர்ப்பணிப்பு சுட்டெண்ணில் 158 நாடுகளில் 94 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 17 இடங்கள் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை 161 நாடுகளில் குறைந்த பொதுச் சேவைகளை செலவிடும் நாடுகளில் இலங்கை ஆறாவது ஆகக்குறைந்த இடத்தைப் பிடித்துள்ளதாகவும் 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர், குறைந்த சுகாதார மற்றும் கல்வி வரவு செலவுகளை ஐந்தில் ஒரு பங்காக இலங்கை குறைத்துள்ளதாகவும் ஒக்ஸ்பாம் கூறுகிறது.
பொதுச் செலவீனத்தில் இலங்கையை விட குறைந்த தரவரிசையில் தென் சூடான், திமோர்
லெஸ்டே, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், உகாண்டா, நேபாளம் மற்றும் யேமன் ஆகிய
நாடுகள் அடங்குகின்றன.