ஐ.நா அறிக்கையில் இலங்கையில் பொருளாதார குற்றம் செய்தவர்களின் பெயர்கள்:சரித ஹேரத்
நாட்டை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக வேண்டுமென்றே பொருளாதார குற்றத்தை செய்த குழு தொடர்பாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றின் மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது.
கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அதன் பிரதிநிதிகள் இதனை கூறியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்,
வேண்டுமென்றே செய்த பொருளாதார குற்றம்
“வேண்டுமென்றே செய்த குற்றம் காரணமாகவே நாட்டின் பின்தங்கிய கிராமங்களில் உள்ள மக்கள் வரிசைகளில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.
இந்த நெருக்கடியை உருவாக்கியது யார் என்பதை கண்டறிய வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா அறிக்கையில் தெளிவாக 5 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள்
கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, பேராசிரியர் லக்ஷ்மன், எஸ்.ஆர்.ஆட்டிகல, அஜித் நிவாட் கப்ரால் மற்றும் அப்போது நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச ஆகியோரின் பெயர்கள் அறிக்கையில் கூறப்பட்டிருந்தன. இந்த பெயர்கள் மிக தெளிவாக முன்வைக்கப்பட்டிருந்தன.இதனை கைவிட நாங்கள் தயாரில்லை” என சரித ஹேரத் கூறியுள்ளார்.