சம்பளத்தை பெற மாதந்தோறும் போராட்டம் நடத்தும் நிலைமை:ரூபவாஹினி ஊழியர்கள்
மாதாந்தம் தமது சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச ஊடக நிறுவனமான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது
இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தை பெற்றுத் தருமாறு கோரி, ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் கூட்டுத்தாபனத்தின் வரவேற்பறையில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டுத்தாபனத்தின் நிர்வாக அதிகாரிகளுக்கு எவருக்கும் சிறப்புரிமைகள் குறைக்கப்படவில்லை எனவும் சாதாரண ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உரிய சம்பளத்தை வழங்கும் வரை தொடர்ந்தும் எதிர்ப்புகளில் ஈடுபட போவதாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்து்ள்ளனர்.
நஷ்டத்தில் இயங்கும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்
இன்று நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் கூட்டுத்தாபனத்தின் அனைத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நஷ்டத்தில் இயங்கி வருவதால், ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.