இறக்குமதி முட்டை சில்லறை விற்பனைக்கென வெளியான அறிக்கை தவறானது! விவசாய அமைச்சு
இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை சில்லறை விலைக்கு விற்பனை செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்து வெளியான அறிக்கை தவறானது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை விலையில் விற்பனை செய்வதற்காக, சந்தைக்கு விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து விவசாய அமைச்சினால் இன்று முற்பகல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டை
நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இந்தநிலையில் முட்டை மாதிரிகள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு, அனுமதி பெறப்பட்டுள்ளதாக முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், குறித்த அறிக்கை தவறானது என அறிவித்து, விவசாய அமைச்சினால் மற்றுமொரு புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சந்தையில் விற்பனை செய்ய அனுமதிப்பதில்லை
புதுப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், இறக்குமதி செய்யப்பட்ட கோழி முட்டைகளை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அனுமதிப்பதில்லை என விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது வெதுப்பக தொழிலில் மாத்திரம் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட கோழி முட்டைகளை, சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்குமாறு முட்டை விற்பனையாளர்கள் விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், அதனை அனுமதிப்பதில்லை என அமைச்சு தீர்மானித்துள்ளது. கோழிப்பண்ணை தொழில்துறை மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு உள்ளிட்ட பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
முட்டை தட்டுப்பாடு
நாட்டில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டினை நீக்கும் வகையில் தற்போது அரசாங்கம் விதித்துள்ள முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு கோழிப்பண்ணை சார்ந்த தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்தப்படும் சோளத்தின் தட்டுப்பாட்டை நீக்குவதுடன், கால்நடை தீவனமாக அரிசியை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டதை அடுத்து 15 நாட்களுக்குள் நாடு முழுவதும் முட்டை விற்பனை செய்யப்படும் என முட்டை மற்றும் கோழி சார்ந்த உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இங்கு, முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்க அமைச்சரவை அறிவிக்கும் என்றும், கால்நடை தீவனமாக அரிசியை பயன்படுத்துவதற்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், முட்டை இறக்குமதி நிறுத்தப்பட மாட்டாது என தெரிவித்த அமைச்சர், முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி முட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கும் வரை முட்டை இறக்குமதி தொடரும் எனவும் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
சில்லறை சந்தையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்திடமிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் முன்னதாக அறிவித்திருந்தது.
நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்
எனினும், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் மேல் மாகாணத்தில் உள்ள பாரியளவில் உற்பத்தியில் ஈடுபடும் வெதுப்பகத் தொழிற்துறைக்காக மாத்திரமே விற்பனை செய்வதற்கு இது வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, கடந்த 26 ஆம் திகதி ஒரு மில்லியன் முட்டைகளுடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது.
இந்த முட்டை மாதிரிகள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு, அனுமதி பெறப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்பட்ட 2 மில்லியன் முட்டைகள் துறைமுகத்திலிருந்து இன்னும் அகற்றப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.