கோழைத்தனமான அரசே 'ரணில் - ராஜபக்ச அரசு' - சஜித் சாடல்
இளைய தலைமுறையின் ஒன்றிணைவுகளுக்குப் பயப்படும் கோழைத்தனமான அரசே 'ரணில் - ராஜபக்ச' அரசு என்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது சாடினார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.
பாதுகாப்புப் படையினர் புடை சூழ்ந்து, ஆயுதமேந்தி அமைதியாகப் போராடும் இளைஞர்களைக் கேவலமான முறையில் ஒடுக்குகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
"போராடும் இளைஞர்கள் மனித குலத்தின் பசி வேதனைகள் குறித்துக் கூட அற்பமேனும் பொருட்படுத்துவதில்லை. வன்முறை மற்றும் அரச மிலேச்சத்தனம் அவர்களுக்கு அன்றிலிருந்தே பரிச்சயமானது. இந்த மிலேச்சத்தனத்துக்கு எதிராக நாம் எழுந்து நிற்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
"ஐக்கிய மக்கள் சக்தி நாடு முழுவதும் சென்று தொகுதி தொகுதியாக ஒழுங்கமைத்து இலட்சக்கணக்கானோருடன் விரைவில் கொழும்புக்கு வந்து ஜனநாயகத்தை வென்றெடுக்கத் தயாராகவுள்ளது. அரசு முடிந்தால் அடக்குமுறையைத் தொடரட்டும்" என்றும் அவர் சவால் விட்டார்.
"அரச அடக்குமுறையும், வன்முறையும் மக்கள் சக்தியால் தோற்கடிக்கப்படும்"
என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.