சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும்! தமிழர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
நாடளாவிய ரீதியில் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா
வவுனியா - நெடுங்கேணியில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நெடுங்கேணி நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டமானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ”தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்”, “அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க”, “வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கபட வேண்டும்” போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.
இதன் போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஊடகங்களுக்கு வாசித்து காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: ஷான், ராகேஷ்
மட்டக்களப்பு
ஜனாதிபதியுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு கோரி இன்று மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடிய மக்கள் இந்த போராட்டத்தினை தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு மற்றும் இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான சமஸ்டி தீர்வு குறித்து வலியுறுத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கலந்துகொண்ட பெருமளவிலான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பல்வேறு ஸ்லோகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்கள் கல்விமான்கள் மகளிர் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதி நிதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி தீர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைவு செய்வோம் என்னும் தலைப்புகளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு பட்ட அமைப்புகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அமைப்பினால் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
”வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகளை சிறுபான்மை தமிழ அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையே நடைபெற உள்ளதாக அறிகின்றோம். அதனை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம்.
எனினும் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் கோரிக்கைகளையும் அரசியல் தேவைகளையும் உள்ளடக்கிய வகையில் இப் பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டுமாயின் இப் பேச்சுவார்த்தை வெளிப்படை தன்மை உடையதாக நடைபெற வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் இடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பதனை நாம் வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.
மேலும் நடைபெறவுள்ள அரசியல் தீர்வு தொடர்பான இப் பேச்சுவார்த்தைகளில் தனி ஒரு கட்சியை சார்ந்த ஒரு சில பிரதிநிதிகள் மாத்திரம் கலந்து கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் ஊடாக தகவல்கள் வெளிவருகின்றமையை நாம் பார்க்கின்றோம்.
மேலும் அக்குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தலைமைத்துவங்கள் இடையே பரஸ்பரம் வெளிப்படை தன்மையுடைய கலந்துரையாடல்களே ஒருமித்த முன்னெடுப்புகளோ காணப்படாததை நாங்கள் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம் .
இது இத்தரப்பினர்களை தேர்தல் மூலம் தெரிவு செய்த மக்கள் மத்தியில் காணப்படும் விமர்சனமாக உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நிலையான அரசியல் தீர்விற்கு பங்கம் விளைவிக்கும் ஜனநாயகமற்ற போக்காக காணப்படுவதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எனவே அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒரே குரலில் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வினை வலியுறுத்த வேண்டும்.
இதுவே தமிழ் மக்கள் தமது ஜனநாயக வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்த தமிழ் அரசியல் பிரதி நிதிகளின் கடமையாகும்.அந்த வகையில் கீழ் குறிப்பிடப்படும் முக்கிய விடயங்களிலும் ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்துமாறு வேண்டுகின்றோம்.
01. வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்.
02. ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மத்திய அரசினால் மீளப்பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும்.
03. ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டும் இதில் பெண்கள் ஐம்பது வீதம் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
04. வடக்கு கிழக்கு மாகாண எல்லைக்கு உட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.
05. தற்போது வடக்கு கிழக்கில் காணப்படும் ராணுவ மயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு தேசிய பாதுகாப்புக்கான ராணுவம் என்பது 1983 க்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
06. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் மத கலாச்சார இடங்கள் தொல்பொருள் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
07. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
செய்தி: குமார்
முல்லைத்தீவு
இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டமொன்று இடம்பெற்றது.
இன்று (05) காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி :வன்னியன் ,எரிமலை
திருமலை
வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் திருகோணமலை பொது விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக பேரணி ஒன்று இடம்பெற்றது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பபெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டிய பதாதைகளுடனான பேரணியே முன்னெடுக்கப்பட்டது.
இதில் பொதுமக்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவின் அங்கத்துவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி : ராகேஷ்