கிராம சேவையாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்(Video)
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அண்மைகாலமாக பணியாற்றிவரும் கிராமசேவையாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்மடு நகர் சம்புக்குளம் கிராம மக்கள் நேற்றைய முன்தினம் (10.10.2022) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்ததாவது,
மக்கள் விசனம்
“கல்மடு நகர் சம்புக்குளம் கிராமத்திற்கு பொறுப்பான கிராமசேவையாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அப்பகுதியில் வாழும் மக்களின் சகமனிதர்களை போன்று பாக்காது கேவலமாக மதிப்பதாகவும், தாம் ஏதும் உதவியை கேட்டுச் சென்றால் ஏன்வந்தீர்கள் என உதாசீனம் செய்வதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், தனக்கு பிடித்தவர்களுக்கு சிலருக்கு மாத்திரமே உதவி பொருட்களோ அல்லது எந்த ஒரு தேவை ஏற்படுத்திகொடுப்பதாகவும் அவர்களுக்கு மாத்திரமே உதவிகளை செய்கிறார் எனவும் இக்கிராமத்தில் உள்ள பலர் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
இதன் காரணமாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக ஒருவேளை உணவுக்கே வழியின்றி தவிப்பதாகவும் சிறு குழந்தையுடன் பால்மா பெறுவதற்குக் கூட வசதியின்றி தவிப்பதாகவும், அத்துடன் பல நிறுவனங்கள் உதவி பொருட்களை வழங்கினாலும் அவை தமக்கு வழங்கப்படுவதில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமுர்த்திக் கொடுப்பனவு கொடுப்பதாயினும் வேறு எந்த உதவி திட்டத்தை வழங்குவதிலும் சரி அப்பகுதியில் வாழும் மக்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஒரு புதிய கிராம சேவையாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.