45 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்த இலங்கை! இந்திய அணியின் அபார வெற்றி
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில், இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஜப்பானின் நிசின் நகரில் உள்ள கொரோகி விளையாட்டு பூங்காவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இந்த வெற்றியைப் பதிவு செய்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது.
45 ஓட்டங்கள்
ஆரம்பத்தில் இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை 46 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பெற்றார்.
வைபவ் சூர்யவன்ஷி 21 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

இலங்கை அணி சார்பில் அணியின் தலைவர் சஹான் ஆராச்சிகே மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது. 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் துடுப்பாட்டம் இந்திய பந்துவீச்சுக்கு எதிராக ஆரம்பத்திலேயே சரிந்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம்
முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், இலங்கை அணியால் மீண்டு வர முடியவில்லை. இறுதியில் 45 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இலங்கை அணி இழந்தது.
இதன் மூலம் இந்திய அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து, தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.
அதேவேளை, இலங்கை அணி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடவுள்ளது.
தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களுக்கான போட்டிகள் ஒக்டோபர் 3ஆம் திகதி கொரோகி விளையாட்டு பூங்காவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
