முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நிமிடங்கள்: அநுர அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நிமிடங்களில் தங்கள் பிள்ளைகளுடன் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்படுதல் தொடர்பான ஐக்கியநாடுகளின் செயற்குழுவை மேற்கோள் காட்டி இந்த செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
வலிந்து பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஆஸ்விட்ஸ் விடுதலை இடம்பெற்று 80 வருட நிறைவை சுட்டிக்காட்டியுள்ள அவர் இனி ஒருபோதும் வேண்டாம் என்பது சாத்தியமாகவில்லை. உலகின் பல நாடுகளில் பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் இனப்படுகொலையின் ஒரு கருவியாக தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம்
பலவந்தமாக காணாமல்போதல் தொடர்பான உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் வடிவில் இலங்கை அரசாங்கம் காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களிற்கு இறுதி விடையை வழங்கி இந்த விவகாரத்திற்கு முடிவு காணவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை ஐநா கேட்டுக்கொள்ளவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் வி.ருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யுத்தத்தின் இறுதியில் கொண்டுசெல்லப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசபிற்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளிற்கும்,சிறு குழந்தைகள் உட்பட அவர்களின் குடும்பத்தவர்களிற்கும் என்ன நடந்தது என்பது தெரியாத நிலை நீடிக்கின்றது என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் தெரிவித்த விடயத்தை அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இராணுவத்தினராக இருக்ககூடியவர்கள் தங்கள் குடும்பங்களுடன் சரணடைந்தார்கள்.
அந்த முழுக்குடும்பங்களும் காணாமல்போயுள்ளன என தெரிவித்துள்ள அவர், அவர்களில் சிறுகுழந்தைகளும் சிறுவர்களும் இருந்தனர் என தெரிவித்துள்ளார் என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலெமார்ட் தெரிவித்ததை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |