கடனை மீளச் செலுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கை
இலங்கையும் அதன் கடன் வழங்குனர் குழுவும் பெற்றுக்கொண்ட கடனை 2028ஆம் ஆண்டு வரை திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதற்கான இறுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் (Sri lanka) சீனாவின் செல்வாக்கு விரிவடைவதைத் தடுக்க
ஜப்பான் (Japan) உள்ளிட்ட கடன் வழங்குநர்கள் முயற்சி செய்து வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடன் வழங்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதோடு அடுத்த சில வாரங்களில் விரிவான அறிவிப்பு வெளியாகும் என்று ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்
கடன் கொடுப்பனவுகள்
இதன்படி, இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 2028ஆம் ஆண்டு முதல் 2042ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகளாக இருப்பதோடு வட்டி விகிதம் 2 வீதமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் இலங்கை பொது வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.
இதனையடுத்து, நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக கடன் வழங்கும் நாடுகளின் கூட்டம் ஏப்ரல் 2023ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய கடன் வழங்கும் நாடான ஜப்பான் (Japan), இந்தியா (India) மற்றும் பிரான்சுடன் (France) தற்போது பேச்சுவார்த்தைகளில் தலைமை வகிப்பதோடு இந்த கலந்துரையாடல்களில் இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குநரான சீனா பார்வையாளராக மட்டுமே இணைந்துள்ளது.
இதற்கிடையில் 2023ஆம் ஆண்டின் இறுதியில், இலங்கையின் நிலுவையிலுள்ள கடன் தொகை 37.3 பில்லியன் டொலர்களாகவும் இதில் சீனாவின் கடன் 4.7 பில்லியன் டொலர்களாகவும் உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |