அரச ஊழியர்களின் சம்பளம்! அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு
மக்களின் வரிப்பணத்தில் கிடைக்கப் பெறும் வருமானம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்திற்கும் அபிவிருத்தி பணிகளை பேணுவதற்கும் செலவிடப்படுகிறது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது அரச ஊடகமொன்று புனரமைக்கப்படாத வீதிகள் தொடர்பில் தினமும் செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் தனிப்பட்ட ரீதியில் என்னால் அந்த வீதிகளை புனரமைக்க முடியாது.
மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம்
அரசாங்கம் அமைச்சிற்கு நிதியை வழங்கினால் மாத்திரமே வீதிகளை புனரமைக்க முடியும். ஏற்கனவே அமைக்கப்பட்ட வீதிகளுக்காக ஒப்பந்தக்காரர்களுக்கு 80 பில்லியனுக்கும் அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது.
இந்தத் தொகையை தொகுதிகளாக மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே செலுத்திக் கொண்டிருக்கின்றோம். செலுத்த வேண்டிய பணத்தை வழங்காவிட்டால் , ஒப்பந்தக்காரர்கள் வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கமாட்டார்கள்.
மக்களின் வரிப்பணத்தில் கிடைக்கப் பெறும் வருமானம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்திற்கும் அபிவிருத்தி பணிகளை பேணுவதற்கும் செலவிடப்படுகிறது. இதனால் எஞ்சிய தொகை எதுவும் இல்லை.
முன்னர் பணம் அச்சிடப்பட்டு இந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டன. எனினும் தற்போது அவ்வாறு செய்ய முடியாது.
எனவே இது முறையாக முகாமைத்துவம் செய்யப்பட வேண்டிய பிரச்சினையாகும். நிதி முகாமைத்துவம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்றார்.