அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் நாலக கொடஹேவா
முன்னாள் அமைச்சரும் வியத் மக அமைப்பின் முக்கிய உறுப்பினருமான நாலக கொடஹேவா தற்போதைய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோருடன் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அரசாங்கத்தின் தோல்விக்கான பிரதான காரணம்
அரசாங்கத்தின் நாட்டின் பிரச்சினையை தீர்க்க முடியும் என்பதை காணமுடியவில்லை. நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு பலர் விடுத்த கோரிக்கையை தவறாக புரிந்து கொண்டமை தற்போதைய அரசாங்கத்தின் தோல்விக்கு பிரதான காரணம்.
நாட்டின் பிரச்சினைகள் பற்றி பிரதமரோ, அமைச்சர்களோ எவரும் கதைப்பதில்லை. ஜனாதிபதி நீண்டகாலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை.
இப்படி மக்களின் பிரச்சினைகளை மறந்து விட்டு செயற்பட்டால், மக்கள் அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கூறி மீண்டும் வீதியில் இறங்குவார்கள்.
அரசியல் ரீதியாக பிரபலம் இல்லாத கஷ்டமான முடிவுகளை கூட சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று எடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.
இதன் காரணமாக சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு பலர் தொடர்ந்தும் கோரி வருகின்றனர். தற்போதைய அரசாங்கத்தில் பிரதான எதிர்க்கட்சி அல்ல குறைந்தது ஆளும் கட்சிக்கும் சரியான பிரதிநிதித்துவமில்லை.
ரணிலுக்கு அரசாங்கத்திற்குள் கிளம்பி வரும் எதிர்ப்பு
ஒரு ஆசனத்தை கொண்டுள்ள ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்கி இருப்பதால், அரசாங்கத்திற்குள் அவருக்கு எதிராக எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நிலையான பலத்தை கொண்டிராத அரசாங்கம், நாட்டுக்காக முக்கியமான சிரமமான முடிவுகளை எப்படி எடுக்கும். நாட்டை நிர்வாகம் செய்வது என்பது எங்கோ ஓரிடத்தில் கடனை பெற்று அன்றாடம் முகாமைத்துவம் செய்வதல்ல.
எரிபொருள், மின்சாரம், சமையல் எரிவாயு போன்றவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு என்பவற்றுக்கு இந்த துறைகளில் அரசின் ஏகபோக உரிமையை இல்லாமல் செய்வதே ஒரே தீர்வு.
தற்போதைய அமைச்சரவைக்கு எதையும் செய்ய முடியாது எனவும் நாலக கொடஹேவா கூறியுள்ளார்.