சுமந்திரன் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளை தூக்கி எறிந்த மக்கள்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகியிருந்த நிலையில், அது இங்கு பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்து விட்டுச் சென்றிருக்கின்றது.
வடக்கு - கிழக்கு தமிழர் பகுதி உட்பட, தென்னிலங்கை மற்றும் மலையக பகுதிகளில் இருந்து களமிறங்கிய மூத்த அரசியல்வாதிகள் அனைவருக்கும் இந்த தேர்தல் களம் தலையில் ஓங்கி அடித்தாற் போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அதிர்ச்சியை உருவாக்கியிருக்கின்றது.
குறிப்பாக, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது யாரும் எதிர்பாராத விதமாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றதை அடுத்தே இந்த மாற்றம் நிகழத் தொடங்கியிருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
பெரும்பான்மை
இதற்கு முந்தைய அரசாங்கத்தின் மீதான விரக்திதான் ஜனாதிபதி தேர்தலில் அநுரவின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது என்று பல மூத்த அரசியல் தலைவர்கள் தங்களது மனதை தேற்றிக்கொண்டிருந்த நிலையில், வெறும் மூன்று பேரைக் கொண்ட அநுர தரப்பால் நாடாளுமன்ற பெரும்பான்மையை எப்படிக் கொண்டு வந்துவிட முடியும் என்ற இறுமாப்புக்கும் விழுந்த அடியாகவே நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
சுட்டிக்காட்டி சொல்வதென்றால், பல தமிழ் தலைமைகளுக்கு இனி தங்களுக்கொரு அரசியல் எதிர்காலம் இல்லையோ என்ற அச்சத்தை, அநுர தரப்பின் இந்த விஸ்வரூப வெற்றி தோற்றுவித்துள்ளது.
வடக்கை பொறுத்தமட்டில், தமிழ்த் தேசியம் காக்கும் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம்.ஏ.சுமந்திரனின் தோல்வி, பல அரசாங்கங்களில் அமைச்சராகவும், பல பொறுப்புக்களை வகித்தவராகவும், மூத்த அரசியல்வாதியாகவும் அடையாளப்படுத்தப்படும் டக்ளஸ் தேவானந்தாவின் தோல்வி ஆகியன தமிழர் அரசியல் பரப்பில் இன்று பேசுபொருளாக மாறியுள்ளன.
இதனைத் தவிர்த்து, தென்னிலங்கையில் மிக முக்கிய அரசியல்வாதிகளாக, அமைச்சர்களாக, பல பொறுப்புக்களை வகித்தவர்களாக காணப்பட்ட பல அரசியல்வாதிகளின் நாடாளுமன்ற பிரவேசத்திற்கும் இந்த தேர்தலின் ஊடாக பொதுமக்கள் முடிவு கட்டியுள்ளனர்.
எதிர்பாராத பல தோல்விகள், தங்களது சொந்த தொகுதியிலேயே படு தோல்வி என்று தோல்விகளின் எண்ணிக்கை இன்று கடுமையாக அதிகரித்துள்ளது.
மக்கள் போராட்டங்கள்
சுட்டிக்காட்டிச் சொல்வதென்றால், கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும், மலையக மக்களுக்கு உரிமை வேண்டும் என்ற கொள்கையோடு இத்தனை வருடங்கள், நாடாளுமன்றம் சென்று, அமைச்சுக்களைப் பொறுப்பேற்று, நாடாளுமன்ற கதிரையை அலங்கரித்த மனோ கணேசனை, உங்களது சேவை எங்களுக்கு போதும் என்று மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். என்னதான், தேசியப் பட்டியலுக்குள் உள்ளீர்ப்பதாக சஜித் பிரேமதாச, மனோ கணேசனுக்கு உறுதியளித்தாலும் கூட தோல்வி என்பது தோல்விதானே.. மக்கள் மாற்றுத் தெரிவை நாடியுள்ளார்கள் என்பதை மறுக்கவும் முடியாது அல்லவா..
மகிந்த ராஜபக்சவின் தீவிர விசுவாசியாகவும், நாடாளுமன்றத்தில் பல தடவைகள் தன்னை ஒரு சண்டியனாக காட்டிக்கொண்டு, அடிக்கடி சிறை சென்று தன்னை ஒரு பேசுபொருளாகவே வைத்திருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் மக்கள் புறக்கணித்துவிட்டனர்.
தனது தந்தையின் கொடூர மரணத்தை அடுத்து அரசியலுக்குள் அடி எடுத்து வைத்து பின்னர், கட்சி மாறினாலும், தன்னை நாடாளுமன்றத்தில் மிக வலுவான ஒரு பெண் உறுப்பினராக நிலைநிறுத்திக் கொண்ட ஹிருணிக்காவையும் மக்கள் இம்முறை புறக்கணித்து விட்டார்கள்.
கடந்த 2020ஆம் ஆண்டும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்விகண்ட ஹிருணிகா, தொடர்ந்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு, மக்களுக்காக குரல் கொடுத்து வந்திருந்தார். இதனால் கைதுகளும் இடம்பெற்றிருந்தன. ஒரு கடத்தல் வழக்கிற்காக அவர் சிறைவாசமும் அனுபவித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர்த்து, எரான் விக்ரமரத்ன, விதுர விக்ரமநாயக்க உள்ளிட்ட அரசியல்வாதிகளையும் மக்கள் புறக்கணித்திருக்கின்றார்கள்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலகட்டத்தில், ராஜபக்ச தரப்பால், கடத்தப்பட்டு முதலைக்கு பலர் இரையாக பரிசளிக்கப்பட்டனர் என்று ஊடக சந்திப்பொன்றை நடத்தி சர்ச்சையை கிளப்பிய ராஜித சேனாரத்னவையும் இம்முறை தேர்தலில் தூக்கி எறிந்து விட்டனர் மக்கள்.
வாக்கு வங்கி
ஐக்கிய தேசியக் கட்சியில் பல வருடங்களாக, ரணிலுடன் இணைந்து கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்ட திஸ்ஸ அத்தநாயக்க, இடையில் எடுத்த அரசியல் முடிவுகளால் காணாமல் போயிருந்தாலும், பின்னர் சஜித் தரப்பு ரணிலிடம் இருந்து பிரிந்து வந்ததன் பின்னர் சஜித்தோடு இணைந்து செய்றபட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் தேர்தலில் தோல்வி கண்டுள்ளார்.
அதேபோல, மகிந்த தரப்பில் ஒரு முக்கிய புள்ளியாக, தனக்கென்று சொந்த ஊரில் மிகப்பெரிய வாக்கு வங்கியை வைத்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகேவுக்கும் மக்கள் படுதோல்வியை பரிசளித்துள்ளனர்.
வடக்கைப் பொறுத்தமட்டில், தமிழரசுக் கட்சி மிகப்பெரும் சக்தியாக இருந்து வந்த நிலையில், கட்சிக்குள் சுமந்திரனை உள்ளீர்த்த பின்னர் அந்தக் கட்சியின் உடைவு ஆரம்பமானது என்று பலர் குற்றம் சுமத்தியிருந்தனர். தமிழரசுக் கட்சியில் இன்று ஒரு தலைவர் இல்லாத நிலையில் சுமந்திரனின் தன்னிச்சை முடிவகளால் பலர் கட்சியை விட்டும் வெளியேறியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. அதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் மக்கள் சுமந்திரனுக்கும் தோல்வியை பரிசளித்துள்ளனர்.
அத்துடன், சுசில் பிரேமஜயந்த, நிமல் சிறிபால டி சில்வா, புத்திக பத்திரண, சன்ன ஜயசுமன, ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, ரோசி சேனாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, திலித் ஜயவீர, நிமல் லான்சா, பிரசன்ன ரணவீர, பிரேமலால் ஜயசேகர, அருந்திக பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திசாநாயக்க, ரொசான் ரணசிங்க, பிரமித்த பண்டார தென்னக்கோன், ரோஹன திஸாநாயக்க, நிபுண ரணவக்க, கஞ்சன விஜேசேகர, மகிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார, ரமேஷ் பத்திரன என்று பல அரசியல் தலைவர்கள் துயரமானதொரு தோல்வியைதான் சந்தித்துள்ளனர்.
மேலும், மகிந்த மற்றும் கோட்டாபய அரசாங்கத்தில் பல முக்கிய பொறுப்புக்கள், அமைச்சுக்கள் என்று பதவி வகித்த சரத் வீரசேகரவும் படுதோல்வியடைந்துள்ளார். குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இவரது இனவாத கருத்துக்கள் இவர் மீதான மக்களின் வெறுப்புக்கு ஒரு காரணமாக இருக்கின்றது. அத்துடன், இவரைப் போலவே குணாதிசயங்களைக் கொண்ட இனவாதம் கக்கும் உதய கம்மன்பிலவுக்கும் விடைகொடுத்திருக்கின்றனர் மக்கள்.
யாழ்ப்பாணத்தில் கடந்த முப்பது வருடங்களாக அரசியலில் பெரும் தடம் பதித்திருந்த டக்ளஸ் தேவானந்தாவையும் தூக்கி எறிந்து விட்டனர் யாழ்.மக்கள்.
தேசியப் பட்டியல்
மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இம்முறை தோல்வியை பரிசளித்துள்ளனர்.
அத்துடன், ராஜபக்ச குடும்பத்தில் இருந்து போட்டியிட்டதாலோ என்னவோ, ராஜபக்சக்கள் மீது கடும் வெறுப்பில் இருந்த மக்கள் ராஜபக்ச குடும்ப வாரிசான சசீந்திர ராஜபக்சவைவும் நிராகரித்துவிட்டனர்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 159 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்குள் நுழைபவர்களில் மிக அதிகளவானவர்கள் புது முகங்களாகும்.
புது முகங்களை நம்பி வாக்களித்த மக்கள், இத்தனை வருட காலமாக அரசியலில் இருந்த அறிந்த முகங்களை புறக்கணித்தமை அரசியல்வாதிகளுக்கு மன உளைச்சல்களை மாத்திரம் அல்ல, வருந்தவோ, திருந்தவோ வாய்ப்புக்களை கூட ஏற்படுத்தியிருக்கலாம்.
ஆனால், இதற்கு முன்னரே அப்படி வருந்தியோ அல்லது திருந்தியோ இருந்திருந்தால் இன்று புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகள் அனைவரும் அவைக்குள் இருக்க மக்கள் வழிவிட்டிருப்பார்கள்.
கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் படுதோல்வியை சந்தித்தனர். ஒரு ஆசனத்தைக் கூட வெற்றிகொள்ளவில்லை. ஆனால், விதி வசத்தால் தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கொண்டு ரணில் ஜனாதிபதியானதும், ரணிலைச் சார்ந்திருந்த படுதோல்வியடைந்தவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.
அதே நம்பிக்கையில் மீண்டும் களம் கண்ட ரணில் தரப்புக்கு இம்முறையும் துரதிஷ்டம் துரத்தியடித்திருக்கின்றது. ரணிலை நம்பி யானையிலும், சிலிண்டரிலும் களம் கண்டவர்கள் இன்று என்ன செய்வதென்றே தெரியாத இக்கட்டில் நிலைகுலைந்து நிற்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தலின் போதே சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்த முனைந்த மக்கள் நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த புதிய ஜனாதிபதி அழைப்பு விடுத்ததும், துணிந்து இறங்கி சுத்தப்படுத்த தொடங்கிய மக்கள் பழைய உறுப்பினர்களையெல்லாம் முற்றாகவே துடைத்தெறிந்து சுத்தப்படுத்தியுள்ளனர்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 15 November, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.