பிரிவலை தடை என்ற முடிவிற்கு வடமராட்சி கடற்றொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு
பிரிவலை என அழைக்கப்படும் நூல்வலை கலந்த தங்கூசி வலை தடை என்ற முடிவிற்கு வடமராட்சி- கிழக்கு கடற்றொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பெரிய கண் உடைய பிரிவலையை பயன்படுத்தி குறித்த கடற்றொழிலாளர்கள் நண்டை மட்டும் பிடித்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டிருந்த நிலையில் நீரியல் வளத்திணைக்களத்தின் இந்தமுடிவிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
குறித்த தொழிலையும் தடை செய்தால் வாழ்வாதாரத்திற்கு தாம் கையேந்த வேண்டிய நிலை உருவாகும் என்றும் கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடும் எதிர்ப்பு
சமாசம் உட்பட வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரியால் தடைப்பட்ட தொழில் தொடர்பில் அண்மையில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்தக் கடிதத்தில் பிரிவலை உட்பட பலவகையான தொழில்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை என்றும் மீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், பெரிய கண் உடைய பிரிவலையை பயன்படுத்தி நண்டு பிடிப்பது தடை என்ற முடிவிற்கு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலை உருவாகும் என்றும் எச்சரித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |