ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் அரச கூட்டுத்தாபனம்
தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் குழுவொன்று நிலைய நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பளப் பிரச்சினையை முன்வைத்தே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்கள் போராட்டம்
நிறுவனத்தின் நிதி நிலைமை நாளுக்கு நாள் அதல பாதாளத்திற்கு சென்று வருவதாகவும், இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் வழங்குவதும் நிச்சயமற்ற நிலையில் உள்ளதால் ஊழியர்களின் வேலையும் அபாய கட்டத்தில் உள்ளதாகவும் ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எதிர்வரும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை கிடைக்காத சூழ்நிலையால், தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அதிக அளவில் விளம்பரங்கள் கிடைப்பதும் இல்லாமல் போயுள்ளதென ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பளம் வழங்குவதில் சிக்கல்
ரூபவாஹினி கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் அனைத்து சலுகைகளையும் வசதிகளையும் பெறும் நிலையில், ஊழியர்களின் சம்பளத்தை நிர்வாகம் குறைத்து வருவதாக அந்த நிறுவன ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த நிலையில் சம்பளம் கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.