நடைமுறைக்கு வராத விலை குறைப்புக்கள்! பாதிப்புக்குள்ளாகும் மக்கள்
அரசாங்கம் பொருட்களின் விலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றபோதும் அதன் நன்மை மக்களுக்கு செல்வதாக தெரியவில்லை. அதனால் பொருட்களின் விலை குறையும்போது அதன் நன்மை மக்களுக்கு செல்வதை உறுதிப்படுத்த முறையான பொறி முறையொன்றை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் அசல ஜாகொட தெரிவித்துள்ளார்.
அத்துடன் வியாபாரிகளும் நுகர்வோர் தொடர்பாக சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று ஒரு வருடத்துக்குள் மக்கள் எதிர்நோக்கி வந்த அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுத்திருக்கிறார். குறிப்பாக கடந்த வருடம் ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடுவதற்கோ, அரசியல் கட்சிகள் மேதின ஊர்வலங்களை நடத்துவதற்கோ நினைத்தும் பார்க்கவில்லை.
அந்தளவுக்கு பொருளாதார பிரச்சினை இருந்து வந்தது. அதேபோன்று எரிபொருள் கப்பலுக்கான கட்டணத்தை செலுத்த டொலர் இல்லாமல் பல நாட்கள் குறித்த கப்பல் கடலில் தங்கவைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக பாரியளவில் எரிபொருள் பிரச்சினை இருந்து வந்தது. அதனால் மேதின ஊர்வலங்களை நடத்த அரசியல் கட்சிகள் முயற்சிக்கவில்லை.
பணவீக்கமும் 94 வீதத்தை தாண்டி இருந்தது. இவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று ஒரு வருடத்துக்குள் மக்கள் எதிர்நோக்கி வந்த அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுள்ளார்.
மேதின கூட்டங்களில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை விமர்சித்தாலும் அவர்கள் மேதின கூட்டத்தை சுதந்திரமாக நடத்துவதற்கான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்தி கொடுத்திருந்தார். இது அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியாகும். அதேநேரம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் மற்றும் எரிவாயு விலை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பாரியளவில் விலை குறைக்கப்பட்டிருக்கிறது.
அதிகரித்த விலைகள்
என்றாலும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்கப்படிருந்தபோது அதனை காரணம் காட்டி, சேவைகள் மற்றும் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டது. அதபோன்று உணவகங்களில் சாப்பாட்டு பொட்டலங்களின் விலையும் பாரியளவில் அதிகரிக்கப்பட்டது.
ஆனால் தற்போது எரிபொருள் மற்றும் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளபோதும் உணவுப் பொருட்களின் விலை இன்னும் குறையவில்லை. இது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை இன்னும் தீவிரமாக செயற்பட வேண்டும்.
வியாபாரிகளும் நுகர்வோர் தொடர்பாக சிந்தித்து நியாயமான முறையில் செயற்பட வேண்டும். அத்துடன் அரசாங்கம் பொருட்களின் விலையை குறைக்கும் போது அதன் நன்மை மக்களுக்கு சென்றடையும் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் மக்களின் வாழ்க்கைச்சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் அதன் நன்மை ஒரு சகலருக்கு மாத்திரமே சென்றடைகிறது.
இதனால் மக்கள் அரசாங்கத்துக்கே தொடர்ந்து குறை வரும் நிலை ஏற்படுகிறது. அதனால் இது தொடர்பாக விரைவாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.