லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் குறைப்பு : அரசாங்கத்துடனான இணக்கம் தொடர்பில் அமைச்சர் அறிவிப்பு
தனியார் நிறுவனங்கள், எரிவாயு விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தபோது அரசாங்கம் அமைதியாக இருக்கவில்லை. இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் கலந்துரையாடல் நடத்தினோம் என்று வர்த்தகத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
லாப்ஸ் எரிவாயு நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களாக எரிவாயுவை இறக்குமதி செய்யவில்லை. இதனால், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் ஊடாக எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க நாம் நடவடிக்கை மேற்கொண்டோம்.
மீண்டும் குறைந்த விலை
இந்த மாதம் 41 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை விநியோகிப்பதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதேபோல, அடுத்த மாதம் 40 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான முன்பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று, சந்தையில் இருந்த சமையல் எரிவாயு கொள்கலன்களின் எண்ணிக்கையையும் 80 இலட்சமாக அதிகரித்துள்ளோம்.
இதேவேளை, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது எரிவாயுத் தொகுதியான 3 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை விற்பனை செய்வது தொடர்பில் லாப்ஸ் நிறுவனத்துடன் கலந்துரையாடினோம்.
நிறுவனம் தனது செலவுக் கணக்கீட்டின் அடிப்படையில் விலை விபரங்களை எமக்கு அறிவித்தது. அதன்படி, வரிகள் தவிர்ந்த நிலையில், விநியோகஸ்தர்களைச் சென்றடையும் எரிவாயுவின் விலை 5,361 ரூபாவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனுடன் பெறுமதி சேர் வரி, விநியோகஸ்தர்களுக்கான இலாபப் பங்கு மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கான இலாபப் பங்கு ஆகியவற்றைச் சேர்த்தால் ஒரு சிலிண்டரின் விலை 6,640 ரூபாயாக அமையும் என நிறுவனம் அறிவித்தது.
எனினும், இரண்டு மாதங்களாக எரிவாயுவை இறக்குமதி செய்யாத நிலையில், திடீரென இவ்வளவு பெரிய விலை அதிகரிப்பை நுகர்வோர் மீது சுமத்துவது நியாயமானதல்ல என்பதை நிறுவனத்திடம் தெளிவாகக் கூறியிருந்தோம்.
குறிப்பாக, லாப்ஸ் நிறுவனத்தின் மஞ்சள் நிற எரிவாயு, சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்தும் சுமார் 1.3 இலட்சம் நுகர்வோர் எரிவாயு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிறுவனம் நட்டத்தை எதிர்கொள்ளக் கூடும் என்றாலும், அந்த நட்டத்தை ஒரே தடவையில் நுகர்வோர் மீது சுமத்துவது சரியானதல்ல என்பதை நிறுவனத்திற்கு தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.
உலக சந்தையில் எரிவாயுவின் விலையை நிர்ணயிக்கும் சவுதி அராம்கோ விலை உள்ளிட்ட செலவுகளையும் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

இதனால் நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையுடன் கலந்துரையாடினோம். நிறுவனத்திற்கு நட்டம் ஏற்பட்டாலும், தற்போதைய சூழ்நிலையில் நுகர்வோர் மீது ஒரே தடவையில் இவ்வளவு பெரிய விலை அதிகரிப்பைச் சுமத்துவது நியாயமானதல்ல என்று வலியுறுத்தினோம்.
அதனைத் தொடர்ந்து, நிறவனத்தின் பணிப்பாளர் சபையுடன் கலந்துரையாடிய பின்னர், எரிவாயு சிலிண்டரின் விலையை 6,740 ரூபாயிலிருந்து 5,995 ரூபாயாகக் குறைப்பதற்கு நிறுவனம் இணக்கம் தெரிவித்தது. இதன்மூலம் ஒரு எரிவாயு கொள்கலனுக்கு, 745 ரூபாய் விலைக்கு குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் விலை அதிகரித்திருந்த போதிலும், அந்த நிவாரணத்தை நுகர்வோருக்குப் பெற்றுக்கொடுக்க எங்களால் முடிந்தது.
இது வெறுமனே விலையை அதிகரித்துவிட்டு பின்னர் குறைத்த நடவடிக்கை அல்ல. உலகச் சந்தை விலை அதிகரிப்பு மற்றும் நிறுவனத்தின் செலவுகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, நுகர்வோருக்கு ஏற்படும் சுமையைக் குறைப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கையாகும் என குறிப்பிட்டுள்ளார்.