கொட்டி தீர்த்த கனமழை: நீரில் மூழ்கும் வீதிகள்.. கடும் அவதியில் மக்கள்
புதிய இணைப்பு
மட்டக்களப்பில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
இதன்படி, மட்டக்களப்பு நகரின் பிரதான பேருந்து தரிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் குறித்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
இந்நிலையில் போக்குவரத்து உள்ளிட்ட பொதுமக்களின் அன்றாட நிலைமைகள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளது.
மேலும், மட்டக்களப்பு மார்க்கத்தினூடான தொடருந்து போக்குவரத்து பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதிக மழையுடனான வானிலையால் தொடருந்து மார்க்கம் நீரில் மூழ்கியுள்ள காரணத்தினால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் காரணமாக இன்று(11) காலை 6.05 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரை பயணிக்கவிருந்த உதயதேவி தொடருந்து இரத்து செய்யப்பட்டதாக தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் N.J.இதிபொலகே தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ந்தும் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதோடு வெள்ள நீரும் தேங்கியுள்ளது.
இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டம், சித்தாண்டியில் முச்சந்தி பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால், குறித்த பிரதான வீதியில் செல்லும் சிறிய வாகனங்கள், சித்தாண்டி முதலாம் குறிச்சி பின் வீதியால் முறக்கொட்டான்சேனை சென்று பிரதான வீதியை அடைகின்றன.
மயிலத்தமடு வெள்ளம்
இதேவேளை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் போராட்டம் நடத்தி வரும் பிரதேசத்திலும் வெள்ளம் தேங்கியுள்ளது.
மயிலத்தமடு பண்ணையாளர்கள், மேய்ச்சல் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் தேங்கியுள்ள இந்த வெள்ளம், போராட்டக்காரர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 11,523 குடும்பங்களைச் சேர்ந்த 39038 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை சம்பந்தமாக எவ்வித முறைப்பாடுகள் இது வரை கிடைக்கப் பெறவில்லை - மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் 11 திகதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
நிவாரண சேவை
ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில், ஏறாவூர் 04 இல் அமைந்துள்ள மாஞ்சோலை மணிமண்டபத்தில் தங்கியிருந்தவர்களை அரசாங்க அதிபர் சந்தித்து அவர்களது குறை நிறைகளை கேட்டறிந்துகொண்டார்.
பாதிக்கப் பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான வசதிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபர் இதன் போது பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ் விஜயத்தின் போது மாவட்ட அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் சுரேஸ்குமார், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் சத்திய சஜந்தன்,கிராம உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தி-நவோஜ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |