300 மில்லியன் டொலர்களை மட்டுமே பயன்படுத்த கூடிய நிலையில் இலங்கை
தற்போதுள்ள டொலர் கையிருப்பில் இருந்து பயன்படுத்தக்கூடிய தொகை 300 மில்லியன் டொலர்கள் மட்டுமே என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று எம்மிடம் உள்ள டொலர் கையிருப்பு 1.8 பில்லியன் டொலர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கலால் சட்டத்தில் திருத்தம்
2018ஆம் ஆண்டில் 3,925 மில்லியன் டொலர்களாக இருந்த சுற்றுலா வருமானம் 2021ஆம் ஆண்டில் 682 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளதாகவும், இவ்வருடம் ஆகஸ்ட் 31ம் திகதி வரையில் சுற்றுலா வருமானம் 893 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், கலால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கு வரி விதிப்பதன் நோக்கம் மது மற்றும் சிகரெட் பாவனையை குறைப்பதே தவிர வரி வருமானத்தை அதிகரிப்பதற்காக அல்ல எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கின்றார்.